Shadow

லைசென்ஸ் விமர்சனம்

அறிமுக இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில், சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “லைசென்ஸ்”.  சிறு வயது குழந்தை முதல் பல் போன பாட்டி வரை பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்படும் மோசமான சூழல் உழவும் இந்தக் காலகட்டத்தில்,  இது போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயன்றிருக்கும் அந்த முயற்சியினாலும் சிறப்பான நடிப்பினாலும் கவனம் ஈர்க்கிறது “லைசென்ஸ்” திரைப்படம்.

பள்ளிப்பருவத்தில் இருந்தே தனக்கோ, தன் சுற்றத்தாருக்கோ நடக்கும் பாலியல் அத்துமீறல்களைத் தட்டிக் கேட்கும் துணிச்சலான பெண்ணான பாரதி,  தவறுகளைத் தட்டிக் கேட்டுத் தண்டிக்கும் பணியை விட, தவறே செய்யாத இளம் சமுதாயத்தை உருவாக்கும் ஒப்பற்ற பணி ஆசிரியர் பணி என்பதை தன் தந்தை மூலமாக உணர்ந்து, தன்னை ஒரு ஆசிரியையாக மாற்றிக் கொள்கிறார்.  மேலும் சமூகப்பணிகளையும் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் பாரதி,  ஒரு கட்டத்தில் தன் பள்ளியில் படிக்கும் சிறுபெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, அந்தக் குற்றவாளியைச் சட்டம் தண்டிக்காத நிலையைக் கண்டு வெம்பி, 18 வயது நிரம்பிய பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்களுக்கு துப்பாக்கி கொடுக்கப்பட வேண்டும் என்கின்ற பொதுநல மனுவைப் போடுகிறார். அதன் முடிவு என்ன ஆனது என்பதே லைசென்ஸ் திரைப்படம்.

முதல் படத்திலேயே எடுத்துக் கொண்ட கதைக்கருவுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் இயக்குநர் கணபதி பாலமுருகன். சமூகத்திற்கு மிகவும் தேவையான ஒரு கருத்தை எடுத்துக் கொண்டதோடு அதை ஒரு மிகச் சிறந்த கதையாகவும் படமாகவும் மாற்றி வெற்றி பெற்றிருக்கிறார்.  குறைந்த பட்ஜெட்டில் அதிக அனுபவம் இல்லாத நடிகர்களையும் புதுமுக நடிகர் நடிகைகளையும் வைத்துக் கொண்டு ஒரு நல்ல திரைப்படத்தைக் கொடுத்திருக்கும் இயக்குநரின் முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

சூப்பர் சிங்கர் போட்டியின் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்த இராஜலட்சுமி இப்படத்தின் மூலம் தன்னால் எப்படி சிறப்பாக பாட முடியுமோ, அதே அளவிற்குச் சிறப்பாக நடிக்கவும் முடியும் என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார்.  தானேற்றுக் கொண்ட பாரதி என்னும் கதாபாத்திரத்தை ஆளுமையுடனும் துணிச்சலுடன் நடித்து பாராட்டுகளை அள்ளுகிறார். அது போல் மூத்த நடிகர் டத்தோ ராதாரவியின் நடிப்பும் மெச்சும்படி அமைந்திருக்கிறது.

ராஜலட்சுமி என்று இல்லை. பாரதி கதாபாத்திரத்தில் வேறு வேறு வயதில் நடித்திருக்கும்  அபி நட்சத்திரா மற்றும்  இன்னொரு  சிறுவயது பெண்ணும் கூட நடிப்பில் மெச்சும்படி செயல்பட்டு இருக்கின்றனர் என்பதே உண்மை.  இவர்கள் தவிர்த்து பழ.கருப்பையா,  நடராஜன் ஜீவாநந்தம், விஜய் பாரத்,  ஜீவா ரவி,  நமோ நாராயணா, தான்யா அனன்யா, கீதா கைலாசம், ராதா G நற்பவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

பஜூ ஜோசப் இசையமைத்திருக்கிறார்.  பின்னணி இசையில் உள்ள வசீகரம் இசையில் மிஸ்ஸிங்.  காசி விஸ்வநாதனின் கேமராவும் கேமரா கோணங்களும் படத்திற்கு என்ன தேவையோ அதைக் கச்சிதமாகப் படம்பிடித்து வந்திருக்கிறது.  வெரோனிக்கா பிரசாத்தின் எடிட்டிங் கச்சிதம்.  JRG புரொடெக்‌ஷன்ஸ் சார்பாக ஜீவானந்தம் தயாரித்திருக்கிறார்.

இந்த வழக்கை விசாரிக்கும் பெண் நீதிபதி, ‘நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்க்கும் போது,  பச்சை குழந்தைகள் கைகளில் கூட துப்பாக்கியைக் கொடுத்துவிடுவோமா என்று தோன்றுகிறது’ என்று கூறுவார்.  இந்த சூழலைப் பார்த்து ஆதங்கப்படும் ஒவ்வொருவரின் மனக்குமுறலும் கிட்டத்தட்ட அதுவாகத்தான் இருக்கிறது என்பதே இப்படத்தின் வெற்றிக்கு சான்று.

இப்படத்தைப் பார்க்கும் போது பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் இன்னும் பதைபதைப்போடு அவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்துவார்கள் என்பது சர்வநிச்சயம். அதே நேரம் ஆண் குழந்தைகளைப் பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் பெண் குழந்தைகளையோ, பெண்களையோ அவர்களின் உரிமையின்றித் தொடுவது தவறு என்னும் எண்ணத்தை விதைப்பார்களா என்பது சந்தேகமே! அப்படி விதைத்தால் தான் பெண்களுக்கான குழந்தைகளுக்கான பாதுகாப்பை நாம் எதிர்காலத்திலாவது அறுவடை செய்யமுடியும்.

இதை ஒரு பேசுபொருளாக மாற்றிய காரணத்திற்காகவே “லைசென்ஸ்” திரைப்படத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

– இன்பராஜா ராஜலிங்கம்