மண்டேலா என்னும் மகத்தான க்ளாசிக் திரைப்படத்தைக் கொடுத்த இயக்குநர் மடோன் அஸ்வினின் இரண்டாவது படம். டான், ப்ரின்ஸ் என தரை லோக்கல் அளவிற்கு காக்டெயில் கமர்ஷியல் கொடுக்கும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் என இவர்கள் இருவரின் இணைவையும் ஒட்டு மொத்த திரையுலகு மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ்நாடே உற்றுப் பார்த்தது. படம் மாஸாக வருமா, க்ளாஸாக வருமா என இப்படி ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்தான் மாவீரன்.
ட்ரெய்லரைப் பார்க்கும் போது இது ஒரு சூப்பர் ஹீரோ வகைத் திரைப்படமாக இருக்குமோ என்று தோன்றியது. ஆனால் இது ஒரு சூப்பர் ஹீரோ வகைத் திரைப்படம் இல்லை. ஏனென்றால் சூப்பர் ஹீரோ செய்யும் எந்தவொரு செயலையும் மாவீரன் செய்வதில்லை. நம்மூர் ஹீரோக்கள் செய்யும் வேலையைத் தான் செய்கிறார். ஏதோ குரல் கேட்கிறது குரல் கேட்கிறது என்று டிரைலரில் வருவதை வைத்துப் பார்த்தால் ஒரு வேளை உளவியல் சம்பந்தமான திரைப்படமாக இருக்குமோ என்று தோன்றியது. ஆனால் இது உளவியல் சம்பந்தமான திரைப்படமும் இல்லை. அப்ப அந்தக் குரல் கேட்பது சாமி, பேய், அந்த மாதிரியான சமாச்சாரமாக இருக்குமோ என்றால் அதுவும் இல்லை. ஆக இது எந்த வகை திரைப்படம் என்று கேட்டால் நல்ல காமெடியும், நுட்பமான நுண் அரசியலும் கலந்த வழக்கத்திற்கு சற்றே மாறான ஒரு கமர்ஷியல் திரைப்படம். அவ்வளவே!
தன் தங்கைக்கு நடக்கும் அநியாயத்தைக் கூடத் தட்டிக் கேட்க வழியில்லாத கோழை, தன் மக்களுக்கு நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்டு அவர்களைக் காப்பாற்றுகிறான். இதுதான் மாவீரன் திரைப்படத்தின் ஒரு வரிக்கதை. இந்தக் கோழையிலிருந்து மாவீரன் என்னும் மடைமாற்றம் எப்படிச் சாத்தியப்பட்டது என்பது சற்றே சுவாரசியமான திரைக்கதை.
நாயகன் சத்யா (சிவகார்த்திகேயன்) கார்ட்டூன் ஓவியக் கதைக்கு படங்கள் வரையும் குப்பத்து இளைஞன். அவன் உருவாக்கும் வரைபடக் கதாபாத்திரத்திடம் வீரம் கொப்பளிக்கும். ஆனால் இவன் உடலில் அங்குலம் அங்குலமாய் பயம் பற்றியிருக்கும். சின்ன சின்ன விசயங்களுக்குக் கூடக் கோபப்பட்டு சண்டைக்குப் போகும் அம்மாவிடம், ‘அட்ஜஸ்ட் செய்து வாழக் கத்துக்கோம்மா’ என்று ஆலோசனை தருபவன். வாழ்க்கை அவனை அப்படியே வாழ அனுமதிக்கவில்லை. குடிசைப்புறங்கள் அப்புறப்படுத்தப்பட்டு மக்களுக்காக கட்டப்பட்ட மாளிகையில் மக்களோடு மக்களாக அவனும் குடியமர்த்தப்படுகிறான். அங்கு அவனுக்கும் மக்களுக்கும் நிகழும் அவலங்கள் அவனைக் கையறு நிலைக்குத் தள்ள அப்பொழுது நிகழ்கிறது கோழை வீரனாகப் பார்க்கப்படும் அற்புதம். அதைத் தொடர்ந்து நடக்கும் பல களேபரங்களுக்குப் பிறகு அவன் உண்மையான மாவீரனாக மாறி நிற்கிறான்.
சத்யாவாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு இது உண்மையாகவே முக்கியமான திரைப்படம். இப்படத்தில் இருக்கும் கதாபாத்திர வார்ப்பு அவரின் முந்தையப் படங்களில் காணக் கிடைக்காதது. கோழைக்கான ஒரு உடற்மொழியை அச்சு அசலாகப் பிரதிபலிக்கிறார். தான் எதுவுமே செய்யவில்லை என்று தன்னை நிரூபிக்க அவர் போராடும் தருணங்கள் உண்மையாகவே சிரிப்பை வரவழைக்கின்றன. அது போல் இவர் விட்டத்தைப் பார்த்தாலே திரையரங்கம் விழுந்து விழுந்து சிரிக்கத் துவங்குகிறது. சிவகார்த்திகேயனின் சமீபத்திய படங்களில் சிறப்பான நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்த படம் மாவீரன் தான் என்று உறுதியிட்டுக் கூறலாம்.
தமிழனாக இருந்தால் வேலை கிடைக்காது என்று நினைத்துத் தன்னை வட இந்தியனாகக் காட்டிக் கொண்டு ஹிந்தியில் கையெழுத்து போடும் யோகி பாபு கதாபாத்திரமும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. யோகி பாபு உதிர்க்கும் எல்லா வசனங்களும் சிரிப்பை வரவழைக்கும் மாயம் வெகுநாட்களுக்குப் பிறகு நிகழ்ந்திருக்கிறது. அமைச்சர் ஜெயக்கொடியாக வரும் மிஷ்கின், அவரின் நண்பனாக வரும் சுனில், அம்மாவாக வரும் சரிதா போன்றோர் நடிப்பில் அதகளம் செய்கின்றனர். நாயகியாக வரும் அதிதி சிறிது நேரமே திரையில் வந்து போகிறார்.
பரத் சங்கர் இசையில் ‘வண்ணாரப்பேட்டை’ பாடல் துள்ள வைக்கிறது. பின்னணி இசை காட்சியோடு ஒன்றிணைந்து காட்சிக்கு வலு சேர்க்கிறது. பிலோமின் ராஜ் இன்னும் துணிந்து ஒரு 20 நிமிடங்களைக் கத்தரித்திருக்கலாம். படம் அவ்வளவு நீளம். விது அய்யனாவின் ஒளிப்பதிவில் குப்பத்தின் ஈரமும் மாளிகையின் அவலமும் ஒவ்வொரு சட்டகத்திலும் ஒன்றாகக் குடிபுகுந்திருக்கின்றன.
ஒரு க்ளாசிக் இயக்குநர் ஒரு மாஸ் கமர்ஷியல் நாயகன் இருவரும் இணையும் அதிசயங்கள் தமிழ் சினிமாவில் அவ்வப்போது நடக்கும். ஆனால் அதில் இருக்கும் பெரும் பிரச்சனை அது நாயகனின் படமாகவும் வராமல், இயக்குநரின் படமாகவும் வராமல் பிறிதொன்றாகப் பிரிந்து நிற்கும் அவலம் அடிக்கடி நிகழும். அதுதான் இங்கு மாவீரனிலும் நடந்து இருக்கிறது.
படத்தின் முதல் பாதியில் வறுமைக்கோட்டு கீழ் இருக்கும் குடிசை வாழ் மக்களை நகர்ப்புற விரிவாக்கம் என்ற பெயரில் அரசாங்கம் எப்படி இடம் பெயரச் செய்கிறது என்கின்ற கொடுமையையும், புதிதாகக் குடியேறும் அடுக்குமாடி குடியிருப்புகள் வெளியே பளபளப்பாகவும் உள்ளே பல்லிளித்துக் கொண்டிருக்கும் அவலத்தையும், அங்கே அம்மக்கள் படம் துயரத்தையும் இயக்குநர் தரப்பில் இருந்து எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவு பேசுகிறது திரைப்படம். ஆனால் இது மடோன் அஸ்வினின் படமாக இருந்தால் அதை அவர் இன்னும் ஆழமாக இயல்பு மொழியில் பேசியிருப்பார். அந்த மொழியில் எனக்கு சிறப்பாகப் பேசத் தெரியும் என்பதை மண்டேலாவிலேயே நிரூபித்தவர் அவர். ஆனால் இது மடோன் அஸ்வினின் படம் மட்டும் அல்ல. இது பாக்ஸ் ஆஃபிஸ் நாயகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயனின் படமும் கூட. அதனால் அந்த மக்களின் வலியையும் துயரத்தையும் இயல்பான மொழியில் பேசுவதை விட சிவாவை எதிர்பார்த்துத் திரையரங்கிற்கு வரும் ரசிகர்களையும் குடும்பத்தையும் மகிழ்விக்கின்ற வகையில் கலகலப்பான மொழியில் நகைச்சுவையாகப் பேச வேண்டிய கட்டாயமும் அஸ்வினுக்கு ஏற்படுகிறது.
இந்தச் சவாலை அஸ்வின் முதல் பாதியில் சிறப்பாகவே கையாண்டிருக்கிறார். நகைச்சுவைப் படங்கள் என்று சொல்லிக் கொண்டு வெளியாகும் பல படங்களில் இல்லாத கலகலப்பான நகைச்சுவை, படத்தின் முதல்பாதி முழுக்க நிரம்பி வழிகிறது. அதிலும் குறிப்பாகக் கட்டிடத்தின் மேற்பூச்சு வேலைக்காக பேட்ச் வொர்க் என்று யோகி பாபு வரும் காட்சியில் இருந்து, திரைப்படம் காமெடியில் டாப் ஹியரில் பயணிக்கிறது.
இப்படி முதல்பாதியில் கருத்தாக்கம், குடிசை வாழ் மக்களின் துயரம், வடக்கிந்தியர்களின் வரவால் தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு, சிவகார்த்திகேயன், மிஷ்கின், யோகி பாபு போன்றோரின் கதாபாத்திர வார்ப்பு போன்ற விடயங்களில் அது இயக்குநரின் படமாகவும், காட்சிக்குக் காட்சி கதையோடு இணைந்திருக்கும் காமெடி, கோழை வீரனாகப் புரிந்து கொள்ளப்படும் மாஸ் காட்சிகள் போன்றவற்றில் அது சிவகார்த்திகேயனின் படமாகவும் சரிவிகித கலவையில் இருக்கிறது.
ஆனால் இரண்டாம் பாதியோ வில்லனை வெற்றி கொண்டு ஒட்டு மொத்த மக்களையும் ஒற்றை வீரனாய் நின்று காப்பாற்றுவதும், கட்டிட இடிபாடுகளுக்குள் சென்று குழந்தையை மீட்பதும் என ஒரு சராசரி ஹீரோவின் படமாக மாறி நிற்கிறது.
இரண்டாம் பாதியில் இயக்குநரின் அடையாளம் துளி கூட இல்லாமல் முற்றிலுமாக சிவகார்த்திகேயன் என்னும் ஆளுமை படத்தை ஆக்கிரமிக்கிறார். எனவே முதற்பாதியில் பரவசமும் உற்சாகமும் அடைந்த பார்வையாளன், இரண்டாம் பாதியில் ஒட்டு மொத்தமாக உலர்ந்து உளச் சோர்வு அடைந்து விடுகிறான். தொய்வான சுவாரசியமற்ற இரண்டாம் பாதி, பழகிப் போன சிவகார்த்திகேயன், பார்த்துச் சலித்த நாயகன் – வில்லன் மோதல், பார்க்கவே சகிக்காத க்ளைமேக்ஸ் காட்சிகள், அசரரீ குரல் தொடர்பான தெளிவான பின்கதை இல்லாதது இவையெல்லாம் மாவீரனின் பலவீனங்கள்.
கலகலப்பான நகைச்சுவை, விறுவிறுப்பான புதுமையான கருத்தாக்கம் கொண்ட முதல்பாதி, புதுமையான சிவகார்த்திகேயன், யோகி பாபு கதாபாத்திரம், இசை இவையெல்லாம் மாவீரனின் பலங்கள்.