Shadow

‘வந்த எடம் ‘ பாடலின் மேக்கிங் வீடியோ  வந்தது.

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக கெளரிகான் தயாரித்திருக்கும் திரைப்படம் “ஜவான்”.  வரும் செப்டம்பர் 7ம் தேதி அன்று இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி  ஆகிய மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது.  இதனையடுத்து திரைப்படம் தொடர்பாக விளம்பரப்படுத்துதலில் இறங்கி இருக்கும் தயாரிப்புக் குழுவினர் திரைப்படம் தொடர்பான ஒவ்வொரு விசயங்களாக வெளிவிட்டு, “ஜவான்” திரைப்படத்தினை என்றென்றைக்குமான பேசு பொருளாக மாற்றி வருகின்றனர் என்றே சொல்லலாம்.

முதலில் திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது,  முன்னோட்ட வீடியோ யூ டியூப்பில் சாதனையை சத்தமில்லாமல் படைக்க, அதே சூட்டோடு தமிழில் “வந்த இடம்” என்று தொடங்கும் பாடலை வெளியிட்டனர்.  சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் லுங்கி டான்ஸ் கிட் அடித்ததை நினைவில் கொண்டு, வந்த இடம் பாடலிலும் லுங்கி அணிந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் ஷாருக்கோடு ஆடியது சில நாட்கள் ஹாட் டாப்பிக்காக இருந்தது.

பின்னர் படத்தின் போஸ்டர்களை ஷாருக்கான் வெளியிட்டார்.  அதில் இடம் பெற்றிருந்த தென்னிந்திய நடிகர் நடிகையான விஜய் சேதுபதி மற்றும் நயன் தாராவின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்ற விவாதத்தை ரசிகர்கள் இணையத்தில் தொடங்கினர். தற்போது அதைத் தொடர்ந்து “வந்த இடம்” பாடல் எப்படி உருவானது என்பதை விளக்கும் ”மேக்கிங் வீடியோ” படக்குழு வெளியிட்டிருக்கிறது.

இந்த வீடியோவில் இயக்குநர் அட்லி ஷாருக்கானுக்கு தமிழ் தெலுங்கு மொழி உச்சரிப்புகளை சொல்லிக் கொடுக்கும் காட்சிகளும்,  பயிற்சி செய்யப்பட்ட ஒரு நடன அசைவை ஷாருக்கானோடு சேர்ந்து அட்லி செய்து பார்க்கும் காட்சிகளும் தனித்துவம் வாய்ந்தவையாக விளங்குகிறது. அது தவிர்த்து இந்த பாடலின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்புக்கும் மரியாதை செய்வது போல் இந்த வீடியோ அமைந்திருக்கிறது.

இந்தியில் ‘ஜிந்தா பண்டா’ என்றும், தமிழில் ‘வந்த எடம்’ என்றும், தெலுங்கில் ‘தும்மே துளிபெலா’ என்றும் ஒலிக்கும் மூன்று பாடல்களின் மேக்கிங் வீடியோவும் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.