Search

மணியார் குடும்பம் விமர்சனம்


Maniyaar-kudumbam-movier-eview

தனது மகன் உமாபதியை அவையத்துள் முந்தி இருக்கச் செய்ய, கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி, மணியார் குடும்பத்தை இயக்கித் தயாரித்துள்ளார் தம்பி ராமையா.

“லவ் பண்ணுங்க சார். லைஃப் நல்லா இருக்கும்” என மைனா படத்தில் பேசிய வசனத்தை ஒன்-லைனாக எடுத்துக் கொண்டுள்ளார் தம்பி ராமையா. மாமன் மகனான குட்டிமணியைக் காதலிக்கிறாள் அத்தை மகளான மகிழம்பூ. அந்தக் காதலால் குட்டிமணியின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் படத்தின் கதை.

காவல்துறை உயரதிகாரி நல்லவனாக சமுத்திரக்கனி இரண்டு காட்சிகளில் தோன்றி மறைகிறார். “என் தம்பி” என்ற அடைமொழியுடன் அவரது பெயரைத் திரையில் காட்டுகிறார் தம்பி ராமையா. ‘கலக்கப் போவது யாரு’ ராமரும் தங்கதுரையும், சிங்கம்புலி, சிங்கமுத்து, ராதாரவி Y.G.மகேந்திரன் போன்றோர் கெளரவத் தோற்றத்தில் வருகின்றனர். அனைவரும் தனக்குரிய காட்சிகளை நிறைவாகச் செய்துள்ளனர். ஒரு பாடலுக்கு யாஷிகா ஆனந்த் நடனமாடியுள்ளார்.

மகிழம்பூவாக மிருதுளா முரளி நடித்துள்ளார். குடிகார நாயகனைத் திருத்தி, காற்றாலை தொடங்க வழிமுறைகள் சொல்லி ஊக்குவிக்கிறார். உமாபதியும் குடும்பத்தோடு அதற்கான முயற்சியை எடுக்கிறார். நடனம், சண்டை எனப் படத்தில் தன் மகனுக்கு எல்லா ஸ்கோப்பும் இருப்பது போல் பார்த்துக் கொள்கிறார் தம்பி ராமையா. உமாபதிக்கு நடனமும் சண்டைக் காட்சிகளில் ஆக்‌ஷனும் நன்றாக வருகிறது. ஆனால், நடிப்பில் இன்னும் கவனம் செலுத்தலாம். அனுபவமின்மை நன்றாகவே தெரிகிறது.

படத்திலும் உமாபதிக்குத் தந்தையாக நடித்துள்ளார் தம்பி ராமையா. எந்த வேலைக்கும் செல்லாமல், சொத்தை எல்லாம் விற்றுச் சாப்பிடும் பரம்பரைப் பெருமைக்குச் சொந்தக்காரர். ஆனாலும், பணத்தை ஏமாற்றுபவனைக் கூட மிகப் பணிவாக டீல் செய்யுமளவு அநியாயத்துக்கு நல்லவர். அதற்காக, ஒரு கோடியைத் திருடிக் கொண்டு மறையும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனிடம், அவர் காட்டும் அன்பை நகைச்சுவையாகப் பாவிக்க முடியவில்லை. அந்தக் காட்சியின் நீளமோ எரிச்சலைத் தருமளவு நீள்கிறது. படத்தில், தம்பி ராமையா பிளிறும் ஒலியில் சிரிக்காதது ஆறுதல்.

ஒரு கோடியைத் தொலைத்துவிட்டு, மணியார் குடும்பம் ஊராரிடம் அவமானப்படுகின்றனர். பணத்தை யார் எடுத்தார்கள் என்ற தேடலில் படத்தின் இரண்டாம் பாதி விறுவிறுப்பாகப் போகிறது. ஆனால் உமாபதி ஏன் காவல் நிலையத்தில் கம்ப்ளெயின்ட் தரவில்லை என்பதில் தெளிவில்லை. நாயகியைக் கடத்தும் சைக்கோ என்ற பாத்திரம் பார்வையாளர்களிடம் பதற்றத்தை ஏற்படுத்துவதற்குப் பதில் சிரிப்பொலியை உண்டு பண்ணுகிறது.

உமாபதியின் மாமனாக விவேக் பிரசன்னா நடித்துள்ளார். ஆனால் விக்ரம் வேதா போலவும், மேயாத மான் போலவும் தன் நடிப்பால் பார்வையாளர்களைக் கவரும் அளவு பாத்திரம் அவருக்குக் கிடைக்கவில்லை. காட்சிகள் குறைவெனினும் தண்டு எனும் தன்ராஜாக வரும் பவன் கவனிக்க வைக்கிறார்.

மகனுக்கு ஆற்ற வேண்டிய கடமையாகக் கருதிப் படத்திற்குத் தம்பி ராமையா இசையும் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. க்ளைமேக்ஸ்க்கு முன்பான காட்சிகளிலும், அதைத் தொடர்ந்து வரும் சண்டைக் காட்சியிலும் சுவாரசியத்தை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தியிருக்கலாம். ஒருவன் ‘சைக்கோ’வாக மாற நாயகி காரணமாக இருக்கிறார். நீதி, நேர்மை, நியாயம் என்று இருக்கும் தம்பி ராமையாவும், தன் தந்தையின் செய்கைக்கு வெட்கி வேதனைப்படும் நாயகியும், குற்றவுணர்வும் கொள்வதில்லை, சைக்கோவை மீண்டும் அவரது தந்தையோடு சேர்த்து வைக்கவும் முயற்சி செய்வதில்லை.

தம்பி ராமையா இயக்கத்தில் வந்திருக்கும் மூன்றாவது படம் இது. எனினும் அவரது அனுபவங்கள் வசனங்களாக வந்து விழுகிறதே தவிர காட்சி ரீதியாகத் திரைக்கதையைக் கொண்டு செல்ல எந்த மெனக்கெடுதலும் இல்லை. தம்பி ராமையா என்றதுமே எத்தகைய படமாக இது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மனதில் ஏற்படுமோ, அதைப் பூர்த்தி செய்துவிடுகிறது படம்.