Shadow

ஒரு நொடி விமர்சனம்

நம் வாழ்வின் ஏதேனும் ஒரு நொடியில் நடக்கும் யதார்த்தமான சம்பவங்கள் எப்படி நம் வாழ்க்கையையே புரட்டிப் போடும் என்பதை மர்மமும் திகிலும் கலந்து சுவாரஸ்யமாகப் பேசி இருக்கிறது ஒரு நொடி திரைப்படம்.

கந்துவட்டி கொடுமைகள் மற்றும் நிலமோசடி சம்பவங்களில் ஈடுபடும் கரிமேடு தியாகு (வேல ராமமூர்த்தி) என்பவரிடம் தன் மகளின் திருமணத்திற்காக வாங்கிய கடனுக்காக தன் நிலப்பத்திரத்தை ஒப்படைக்கிறார் சேகரன். ஆறு மாதம் கழித்து வட்டி மற்றும் அசலோடு பணத்தைக் கொடுத்துவிட்டு தன் நிலப்பத்திரத்தை மீட்டு வர செல்கிறார் சேகரன். சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரின் மனைவி சகுந்தலா புகார் அளிக்க இன்ஸ்பெக்டர் பரிதி இளமாறன் (தமன் குமார்) தலைமையிலான குழு அவ்வழக்கை விசாரிக்கத் துவங்குகிறது. முதல் சந்தேகமே கரிமேடு தியாகு மீது வர, போலீஸ் தன் விசாரணையை அங்கிருந்து துவங்குகிறது. விசாரணையின் ஊடாக சேகரன் என்ன ஆனார்…? என்பதை கண்டடைவதே இப்படத்தின் மீதி கதை.

பரிதி இளமாறன் என்கின்ற இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் மிடுக்காக நடித்திருக்கிறார் தம்ன்குமார். அவர் கரிமேடு தியாகுவிடம் இருந்து துவங்கி ஸ்டுடியோ கடை நடத்தி வரும் சேகரனின் அக்கம் பக்கத்து கடைக்காரர்களையும், சேகரனிடம் பணம் கொடுக்க வந்த அவரின் நண்பரையும் விசாரித்து அனைவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரும் புத்திசாலித்தனம் ஈர்க்கிறது. துடுக்கும் மிடுக்கும் கொண்ட இளம் போலீஸ் அதிகாரியாக கட்டப் பஞ்சாயத்து செய்து வரும் கரிமேடு தியாகுவையும் அவருக்கு நிழல் போல இருந்து உதவும் எம்.எல்.ஏ பழ.கருப்பையாவையும் வாரும் இடங்களில் ரசிகர்களை வெகுவாக கவர்கிறார். உருட்டல் மிரட்டல்களுடன் விசாரணையை கைக்கொள்ளும் விதமும் அழகு.

விறைப்பான உடல்மொழியுடன், அப்படியே எதிர்நீச்சல் குணசேகரனை ஜெராக்ஸ் எடுத்து கரிமேடு தியாகுவிற்குள் கொண்டு வந்திருக்கிறார் எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி. பணபலமும் ஆள்பலமும் அதிகாரபலமும் கொண்டு ஆணவத்தில் அவர் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பார்வையாளர்களுக்கு இரத்தக் கொதிப்பைக் கொடுக்கும் அளவிற்கு கச்சிதமான வில்லனாக கதாபாத்திரத்தோடு பொருந்திப் போகிறார். போலீஸ் ஸ்டேஷனில் அமர்ந்து கொண்டே தன்னிடம் விசாரணை செய்யும் இன்ஸ்பெக்டரை அதட்டி மிரட்டும் அந்த உடல்மொழி நடிப்பில் அட சொல்ல வைக்கிறது.

ரூலிங் பார்ட்டி எம்.எல்.ஏ வாக வரும் பழ.கருப்பையா ஓரிரு காட்சிகள் மட்டுமே வந்தாலும் தன் சிறப்பான நடிப்பில் நம் மனதில் பசக்கென்று ஒட்டிக் கொள்கிறார். சகுந்தலா-வாக வரும் ஸ்ரீரஞ்சனிக்கு காணாமல் போன தன் கணவனை எண்ணி கண்கலங்கும் கதாபாத்திரம். நிறைவாக செய்திருக்கிறார்.

சேகரனாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் தன் மகள் கல்யாண செலவிற்காக வாங்கிய பணத்திற்காக தன் நிலப்பத்திரத்தை கொடுத்து வாயடைத்து நிற்கும் காட்சியில் கண்கலங்கச் செய்து, பின் வெள்ளித்திரையிலும் மனத்திரையிலும் காணாமல் போகிறார்.

பொன்னுத்தாயாக வரும் தீபா சங்கரும் ஜீவாவாக வரும் அருண் கார்த்தியும் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை செய்திருக்கிறார்கள்.

கே,.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவாளராக மட்டுமில்லாமல் தயாரிப்பிலும் பங்காற்றியிருக்கிறார். அவரின் ஒளிப்பதிவில் கேமரா சட்டகங்களுக்குள் மர்மமும் திகிலும் போட்டி போட்டுக் கொண்டு உட்புகுந்திருக்கின்றன. கதையோடு இயைந்த கண்களை உறுத்தாத கதைக்கு வலு சேர்க்கும் ஒளிப்பதிவைக் கொடுத்து படத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்.

கல்லூரி இளைஞரான சஞ்சய் மாணிக்கம் இசையமைத்திருக்கிறார். சஞ்சய் மாணிக்கத்தின் பின்னணி இசை படத்திற்கும், படத்தின் காட்சிகளுக்கும் உயிர்கொடுத்திருக்கிறது. ஜெகன் கவிராஜ் வரிகளில் வரும் “கொல்லாதே கண்ணார” பாடல் காதல் நயத்துடன் நம்மை கலக்கச் செய்கிறது.

ஜி.குருசூர்யாவின் எடிட்டிங் பணிகள் ஷார்ப்பாக காட்சிகளை செதுக்கி இருக்கின்றன. அழகர் குருசாமி படத்தினை தயாரித்திருப்பதோடு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்கவும் செய்திருக்கிறார். இப்படத்தை தனஞ்ஜெயன் வெளியிட்டிருக்கிறார்.

பி.மணிவர்மன் எழுதி இயக்கி இருக்கிறார். ஒரு எளிய இயல்பான உண்மை சம்பவத்தை எடுத்துக் கொண்டு, அதன் முன்னும் பின்னும் கதைகளைக் கோர்த்து, “ஒரு நொடி” திரைப்படத்தை ஒரு மிகச்சிறந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார். சேகரன் விசயத்தில் உண்மையில் என்ன நடந்திருக்கும்…? யார் பொய் சொல்கிறார்கள் என்பதை கண்டறிய முடியாதபடி புத்திசாலித்தனமாக திரைக்கதையை அமைத்து ஜெயித்து இருக்கிறார்.

சேகரன் காணாமல் போன வழக்கு விசாரணை ஒரு கட்டத்திற்கு மேல் நகராமல், இறந்து போன மற்றொரு இளம்பெண்ணின் வழக்கின் மீது திரும்புகிறது. இது என்னடா..? புதுக்கதை என்று நாம் யோசிக்க, இரண்டாம் பாதியில் விசாரணையின் போது அந்த இரண்டு கதைகளுக்குமான முடிச்சுகள் மெல்ல மெல்ல அவிழ்ந்து நம்மை ஆச்சரியப்படுத்துகிறது

அந்த கடைசி க்ளைமாக்ஸ் காட்சி ஒரு நொடி நம் மொத்த அனுபவத்தையும் அப்படியே புரட்டிப் போடுகிறது. அந்த க்ளைமாக்ஸை ஒருவராலும் யூகிக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

ஒரு நொடி – நல்ல த்ரில்லர் அனுபவம்