மனிதனின் அடிப்படை குணங்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று காமம், மற்றொன்று கோபம். இந்த இரண்டு உணர்ச்சிகள் மட்டும் தான் அடிப்படையான உணர்ச்சிகள். மற்ற உணர்ச்சிகளான காதல், அன்பு, பாசம், நேசம், பொறுமை, விட்டுக்கொடுத்தல், இரக்கம் காட்டுதல் இப்படி எல்லா உணர்வுகளும் நம் கற்பிதங்களால் மனிதனுக்குள் வளர்க்கப்பட்ட விடயங்களே. இது போன்ற உணர்வுகளை நாம் தலைமுறை தலைமுறையாக கற்பித்துக் கற்பித்து, இன்று மனித இனம் இந்த நிலைமைக்கு வந்து நிற்கின்றது. இதிலிருந்து இன்னும் மேம்பட்டு உயர் நிலைக்குச் செல்வதே மனிதனுக்கும் மனிதகுலத்திற்கும் பெருமை. ஆனால் ஒரு சூழலில் அதுவும் குறிப்பாக ஈகோ நம் மனதிற்குள் நுழையும் போது, மற்ற எல்லா உணர்வுகளையும் ஒழித்துக் கட்டிவிட்டு நம் மனதிற்குள் இருக்கும் அடிப்படை உணர்வுகளில் ஒன்றான கோபத்திற்கு மட்டும் நாம் தீனி போடத் துவங்கினால் நாம் முற்றிலும் மனிதத்தை இழந்து மிருகமாக மாறிவிடுவோம். இதைத் திரையில் காட்சிகளின் கோர்வையாக நிகழ்த்திக் காட்டியிருக்கும் திரைப்படமே “பார்க்கிங்”.
இரண்டு குடும்பங்கள் குடியிருப்பதற்கான ஒற்றை மாடி அடுக்ககக் குடியிருப்பின் கீழ்த்தளத்தில் 10 ஆண்டு காலமாக வாழ்ந்து வருபவர் இளம்பரிதி. அரசு அலுவலகத்தில் பணியாற்றும் அவர் நேர்மைக்கும் உழைப்புக்கும் பெயர் போனவர். தன் ஒட்டு மொத்த வாழ்க்கையின் நோக்கமும் தன் மகளுக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைப்பது தான் என்கின்ற நோக்கத்தோடு வாழ்ந்து வரும் அவர், தன் பெண்ணை மிகவும் கட்டுப்பாடுகளுடன் வளர்க்கிறார். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கிறேன் பேர்வழி என்று அத்தியாவசிய செலவுகளைக் கூட அவர் சுருக்கத் துவங்க, இதனால் வீட்டில் அவ்வப்போது சண்டைகள் எழும்பும்.
இவர் வீட்டுக் குடியிருப்பின் மேல் தளத்திற்கு, காதலித்து பெற்றோரை எதிர்த்து ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்ட ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா ஜோடி குடி வருகிறது. இந்துஜா ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கிறாள். இரண்டு வீடுகளும் சந்தோசமாகக் கூடிப் பேசிச் சிரித்துப் பழகி வரும் நேரத்தில், அந்தக் குடியிருப்பில் இருக்கும் சின்ன பார்க்கிங் ஏரியாவில் தங்களிடம் இருக்கும் ஒரு பைக் மற்றும் ஒரு காரை நிறுத்துவது தொடர்பாக சின்ன பிரச்சனை வெடிக்கத் துவங்குகிறது. அந்தப் பிரச்சனை புகைந்து புகைந்து பூதாகரமான பிரச்சனையாக மாறி இரண்டு பேருக்குள்ளும் இருக்கும் மிருகத்தை எப்படி வெளியில் கொண்டு வருகிறது என்பதை விவரிக்கிறது திரைக்கதை.
எம்.எஸ்.பாஸ்கர் இளம்பரிதி கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். ஒருவித நெகட்டிவ் தன்மையுடன் கூடிய வில்லத்தனமான கதாபாத்திரம், அதை அவர் செய்திருப்பதைப் பார்க்கும் போது, அந்தக் கதாபாத்திரத்தைப் பார்த்தாலே பயம் தொற்றிக் கொள்ளுகிறது. நேர்மையான அதிகாரி, கண்டிப்பான கணவன், அன்பும் அரவனைப்பும் கொண்ட அப்பா என்கின்ற மனிதனுக்கான தளத்தில் இருந்து, எதிரியை உரண்டை இழுக்கும் செயல், ‘உன்னைவிட நான் உயர்ந்தவன்’ என்று காட்டிக் கொள்ளும் மமதை, தான் தோற்றுவிட்டேன் என்கின்ற வலி, அடுத்தவனை அவமானப்படுத்தத் துடிக்கும் துடிப்பு, பழி வாங்குவதற்காகச் செய்யும் பாவகரமான செயல், என இரண்டு விதமான மனிதத்தனங்களை தனக்குள் புதைத்து வைத்து அவர் வெளிப்படுத்தும் இடங்கள் அபாரமானவை. குணச்சித்திர நடிப்பில் எல்லாவித உணர்வுகளையும் கடத்தும் குணச்சித்திர நடிகர்கள் மிகவும் குறைவு. அந்தக் குறைவான நடிகர்களுக்குள் எப்பொழுதும் நிறைவான நடிப்பை தருபவர் எம்.எஸ்.பாஸ்கர். அதை இப்படத்திலும் அநாயாசமாக நிரூபித்திருக்கிறார். வாழ்த்துகள்.
பூவோடு சேர்ந்தால் நாறும் மணக்கும் என்பதைப் போல், ஏற்கெனவே மேம்பட்ட நடிப்பை கொடுத்து வந்த ஹரிஷ் கல்யாண், இந்த பார்க்கிங் படத்தில் மேலும் ஒருபடி எழுந்து நின்றுள்ளார். எதிரில் ஒரு நடிப்பு ராட்சசன் இருக்கும் போது, அவரிடம் தோற்றுக் காணாமல் போகாமல், பதிலுக்குக் களத்தில் நின்று விளையாடுகிறார். அதிலும் குறிப்பாக, ‘நீங்கள் செய்த செய்கைகளுக்குப் பதிலுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டாமா?’ என்று கேட்டு சைக்கோ மாதிரி சிரிக்கும் தருணத்தில் முதுகுத்தண்டை சில்லிடச் செய்கிறார். காதல் காட்சிகளில் கச்சிதமாக உருகும் ஹரிஷ், எமோஷ்னலான காட்சிகளில் மட்டும் இன்னும் சற்று மெருகேற்ற வேண்டியிருக்கிறது. இருப்பினும் இப்படி ஒரு தரமான நடிப்பைக் கொடுத்ததற்காக அவருக்கும் வாழ்த்துகள்.
நாயகியாக வரும் இந்துஜாவிற்கு காதலித்து கைப்பிடித்த கணவன், தந்தை ஸ்தானத்தில் இருக்கும் வயதில் மூத்த பெரியவர் இவர்கள் இருவருக்குமான ஈகோவில் மாட்டிக் கொண்டு அல்லல்படும் கதாபாத்திரம். அதிலும் குறிப்பாக தன் கணவன் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி போலீஸில் தள்ள முயற்சிக்கும் போது, தன் கணவனுக்காக எம்.எஸ்.பாஸ்கரிடம் போய் கண்ணீரும் கம்பளையுமாக நின்று யாசிக்கும் தருணத்தில் நடிப்பில் அட்சயபாத்திரமாக அவதாரம் எடுக்கிறார். ஹாட்ஸ் ஆஃப் டூ இந்துஜா.
எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக வரும் ரமாவும் மிகச் சிறப்பாக நடித்து இருக்கிறார். குரலை உயர்த்திக் கூடப் பேச முடியாத பெட்டிப் பாம்பாக அடங்கிப் போகும் ரமா, ஒரு கட்டத்தில் தன் கணவன் தன்னிலை மறந்து எதற்கும் துணிந்தவனாக நிற்பதைப் பார்த்து அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் இடத்தில் அவரின் நடிப்பு ஆர்ப்பரிக்கிறது. வீட்டின் உரிமையாளராக வரும் இளவரசு கதைக்கு என்ன தேவையோ அதை சிறப்பாகக் கொடுத்திருக்கிறார்.
சாம். சி.எஸ்.-இன் பின்னணி இசை படத்திற்கு மேலும் உயிரூட்டுகிறது. கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளரும் காட்சிகளுக்கு இணையாக அவரது அற்புதமான பின்னணி இசையிலும் அதே உணர்வைக் கொடுத்திருக்கிறார். ஜிஜு சன்னியின் ஒளிப்பதிவு கதை ஒரு அப்பார்ட்மென்டுக்கு உள்ளேயே நடக்கின்றது என்கின்ற உணர்வை அறவே மறக்கடிக்கச் செய்கிறது. குறைந்தபட்ச இடத்திற்கும் மாற்றுவிதமான கோணங்களைப் பயன்படுத்தி கதை சொல்லலுக்குப் பக்கபலமாக உதவி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு இது முதல் படம் என்பதே ஆச்சரியமான விசயமாக இருக்கிறது. ஈகோ என்கின்ற ஒரு சிறிய கதைக்கருவை எடுத்துக் கொண்டு அதை சிறப்பான திரைக்கதையாக மாற்றி, அதை சிறப்பான முறையில் திரைக்குக் கொண்டு வந்த சாதனைக்காகவே இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆரம்பத்தில் இரு கதாபாத்திரங்களுக்கும் கொடுக்கப்படும் கதாபாத்திரச் சித்தரிப்புகள், முக்கிய கட்டத்தில் சிதைந்து போவது தான் கதை என்றாலும் கூட, ஒரு குறிப்பிட்ட கட்டம் வரைக்கும் அந்த ஈகோ சண்டை மிக இயல்பானதாகவும், ஒரு புள்ளிக்கு மேல் அது ஒரு புனைவாகவும் மாறிவிடுகிறது என்பதே உண்மை. அது ஒரு புனைவாக மாறும் புள்ளியில் நாமே அந்தச் சண்டையில் சற்று சோர்ந்து போய், இரு கதாபாத்திரங்கள் மீது எரிச்சல் கொள்ளும் மனநிலைக்குத் தள்ளப்படுகிறோம்.
இந்தக் குறையை மட்டும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், காட்சிக்கு காட்சி பரபரப்பு ஏற்றி, கடைசிக் காட்சி வரைக்கும் பார்வையாளர்கள்களைக் கட்டி வைத்திருக்கும் இந்த “பார்க்கிங்” திரைப்படத்திற்குக் கண்டிப்பாக ஒரு ‘விசிட்’ அடிக்கலாம்.
– இன்பராஜா ராஜலிங்கம்