இரண்டு மகன்களைப் பெற்ற அம்மாக்களுக்கான படம் எனத் தொடங்குகிறது பரோல்.
அண்ணன் கரிகாலன் கொலைகாரனாக இருந்தும், அவன் மீது மட்டும் அம்மா ஆராயி மிகவும் பாசமாக இருக்கிறார் என்ற மனக்குறையுடன் இருக்கிறான் தம்பி கோவலன். ஆளுநரைப் பார்த்து, தன் மகன் கரிகாலனின் விடுதலைக்குக் கருணை மனு அளிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக ஆராயி இறந்துவிடுகிறார். அண்ணனை வர வைக்காமல், அம்மாவின் இறுதிச் சடங்கைச் செய்துவிடலாமென நினைக்கிறான் கோவலன். கரிகாலனின் நண்பர்கள், பிணத்தை எடுக்க விட மாட்டோம் என பிரச்சனை செய்ய, வேறு வழியின்றி அண்ணனை பரோலில் எடுக்க முயற்சி செய்கிறான் கோவலன். மிகவும் ஆபத்தான குற்றவாளி என அறியப்படும் கரிகாலனை பரோலில் எடுப்பது மிகச் சவாலான காரியமாக உள்ளது. கரிகாலனுக்கு பரோல் கிடைப்பதில் ஏற்படும் இடைஞ்சல்களைக் கோவலன் எப்படிச் சமாளித்து அழைத்து வருகின்றான் என திரைக்கதை பயணிக்கிறது.
பரோல் கிடைப்பது போல் தோற்றத்தை ஏற்படுத்தி, பரோல் நிராகரிக்கப்பட்டது என இடைவேளை விடுகின்றனர். ஆனால், பரோல் கிடைத்து கோவலன் வீட்டிற்கு வருவதில் தான் படமே தொடங்குகிறது. இடைவேளையின் சுவாரசியத்தைப் படத்தின் தொடக்கத்திலேயே முடிச்சவிழ்த்து விடுகின்றனர். நான்-லீனியராகப் படத்தைக் கொண்டு போக முயற்சி செய்து, படத்தின் சுவாரசியத்தில் சமரசம் செய்துவிட்டனர்.
படத்தோடு ஒன்ற விடாமல், கடைசி வரை பார்வையாளர்களோடு கோவலன் பேசிக் கொண்டே இருக்கிறார். ‘எங்கண்ணன் ஹீரோன்னா, நான் செகண்ட் ஹீரோ. இப்போ மாஸ் ஹீரோ ஆகப் போறேன்’ என்கிறார். கோவலன் தாய்ப்பாசத்திற்காக ஏங்கிப் பொறாமை கொள்கிறான் எனத் தொடங்கி, கரிகாலனை விட கெத்து என நிரூபித்துக் காட்டுபவனாகச் சித்தரிக்கின்றனர். இந்த இரண்டு காரணங்களில், ஒன்றைக் கூட வலுவாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தாமல் பேசியே நீர்த்துப் போகச் செய்து விடுகின்றனர்.
ஆராயியாக நடித்துள்ள ஜானகி சுரேஷ், அப்பாத்திரத்திற்கு நல்ல தேர்வு. மூத்த மகன் மீது அதிகம் பிரியமாக உள்ளதால் இளைய மகன் பொறாமை கொள்கிறான் என ஆராயிக்கு நன்றாகத் தெரிந்துள்ளது. ஆனால், ‘அப்படிப் பொறாமையில் புழங்காட்டி அதென்ன உறவு?’ என இளைய மகனின் ஏக்கத்திற்கு உரம் சேர்க்கிறார் ஆராயி. ரத்தம் தெறிக்கும் படத்தை, வாய்ஸ் ஓவரில் தொடங்கும் விஜய் சேதுபதி, படம் சுபமாக முடிந்ததும் ‘அம்மா தான்ங்க இதெல்லாம் முடிச்சு வச்சாங்க’ எனப் படத்தை முடித்தும் வைக்கிறார். அம்மா சென்டிமென்ட் படமாக முடிக்கும் பட்சத்தில், இவ்வளவு கொலைகள் ஏன் காட்டப்படுகிறது என ஒரு நிமிடம் தலை சுற்றத் தொடங்கிவிட்டது.
கரிகாலன், கொடூரமான கொலைக்காரன். ஆனாலும் அவன் ஒருத்தனைக் கொலை பண்றான் என்றால் அதற்குக் கண்டிப்பாக பங்கமான காரணம் ஒன்று இருக்கும் எனச் சொல்கிறார்கள் (பங்கமான காரணம் என்றால் அறம் சார்ந்த நல்ல காரணம்). அப்படியாக அந்தப் பாத்திரத்தை ஓர் உயரத்திற்குக் கொண்டு போய், அவனால் கொலை செய்யாமல் இருக்கவே முடியாது என்று தொபக்கடீரெனக் கீழே போட்டு விடுகிறார்கள். இப்படிப் படத்தின் பிரதான கதாபாத்திரங்கள் மூவருமே, இருதுருவ ஒழுங்கின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் போலவே உருவாக்கப்பட்டுள்ளார்கள்.
டைட்டில் கார்டில், இந்தப் படத்திற்காக வாசித்த நூல்களைப் பட்டியலிட்டுள்ளார் இயக்குநர் துவாரக் ராஜா. அதன் தாக்கத்தைப் படம் நெடுகேவும் உணர முடிகிறது. தீவிர வாசிப்பால் உந்தப்பட்டு, கடைசி அத்தியாயம், உலகம் ஒரு நாடக மேடை, வெந்து தணிந்தது காடு என ஏகத்திற்கும் படத்தில் உபத்தலைப்புகளைக் கொடுத்துக் கொண்டே உள்ளார் (நாயகர்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் ஒரு சிறுவனின் பெயர் அமுதன் சேந்தன் என்பது இங்கே தேவையற்ற ஓர் உபக்குறிப்பு).
இடைவேளைக்குப் பிறகான, நீதிமன்றக் காட்சி படத்துடன் ஒன்ற வைக்கிறது. அதன் பிறகும், உள்ளே – வெளியே என்ற ரீதியிலான நான்-லீனியர் யுக்தி, அளவினை மீறுவதால் படத்துடனான ஒரு மன விலகலை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது. வலுவற்ற கதாபாத்திர வடிவமைப்பையும் மீறி, படத்தை ரசிக்க முடிவதற்குக் காரணம் கோவலனாக நடித்துள்ள RS கார்த்திக்கும், கரிகாலனாக நடித்துள்ள லிங்காவும் தான். மிக அற்புதமான பங்களிப்பினை உளமார நல்கியுள்ளனர். RS கார்த்தி முக பாவனைகளால் கலக்கியுள்ளார் என்றால், லிங்காவோ உடற்மொழியால் அசத்தியுள்ளார். லிங்காவின் ஜோடி தென்றலாக வரும் கல்பிக்காவும், RS கார்த்தியின் ஜோடி நர்ஸ் கவியாக வரும் மோனிஷா முரளியும், நாயகிகளாக அல்லாமல் கதையின் ஓட்டத்திற்கு உதவும் பாத்திரங்களாக வந்து செல்கின்றனர்.
வக்கீல் கிஃப்டி மரியாவாக வினோதினி வைத்தியநாதன், கரிகாலனின் நண்பர் பீஃபாக (Beef) ஷிவம், கோவலனின் நண்பர் ஃபெனாயிலாக டென்னிஸ், நீதிபதியாக வரும் TSR போன்ற துணை பாத்திரங்களும் நடிப்பில் கலக்கியுள்ளனர். ராஜ்குமார் அமலின் இசை படத்திற்கு ஒரு கனத்தை ஏற்படுத்துகிறது. மறக்கவியலாத ஒரு சினிமாவாகப் பரிணமிக்க வேண்டிய அத்தனை அம்சங்கள் இருந்தும், கறாரான எடிட்டிங் குறைபாடாலும், நீர்த்துப் போகச் செய்யும் வாய்ஸ்-ஓவராலும், வலுவற்ற கதாபாத்திர வடிவமைப்பாலும், ஓர் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்த சிரமப்படுகிறது பரோல்.