Shadow

பிரேமலு விமர்சனம்

ஜாலியாய் ஒரு படம் பார்த்துச் சிரித்து மகிழ வேண்டுமென்றால், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள பிரேமலு மிக நல்ல தேர்வாக இருக்கும்.

கல்லூரிக் காதல் புட்டுக் கொள்ள, UK போக விசாவும் கிடைக்காமல் போக, ஊரை விட்டு எங்கேயாவது போனால் பரவாயில்லை என்று நண்பனுடன் GATE பயிற்சிக்காக ஹைதராபாத் செல்கிறான் சச்சின். ஹைதராபாத்தும் சலித்து, சென்னையில் இருக்கும் நண்பர்களுடன் இணையலாம் என யோசிக்கும் பொழுது IT-இல் பணிபுரியும் ரீனுவைப் பார்க்கின்றான். கண்டதும் காதலில் விழ, ரீனுவை இம்ப்ரஸ் செய்ய சச்சின், அவனது நண்வன் அமல் டேவிஸுடன் இணைந்து மேற்கொள்ளும் பயிற்சிகள் தான் படத்தின் கலகலப்பான கதை.

இத்தனை மெலிதான ஒரு கருவை, மிகவும் ரசிக்கும்படியான திரைக்கதையாக எழுதி அசத்தியுள்ளனர் இயக்குநர் கிரிஷ் AD-உம், கிரண் ஜோஸும். ‘காதல்டா! ஒரு தடவ தான் வரும், ஒருத்தங்க மேல தான் வரும்’ என ஓவர் எமோஷ்னல் ஆகாமல், அதில் அன்றாட வாழ்வின் சிக்கலையும் லேசாகக் கலந்து, கதையோடு இயைந்த நகைச்சுவையை வசனங்களில் கொணர்ந்து, படம் மிகச் சாதாரணமாகப் பார்வையாளர்களைத் தன்வயப்படுத்திக் கொள்கிறது. பிரதான கதாபாத்திரங்களான நாயகன் நஸ்லென், நாயகி மமிதா பைஜு, நாயகனின் நண்பன் சங்கீத் பிரதாப், நாயகியின் அலுவலகத்தில் பணிபுரிபவராக வரும் ஷ்யாம் மோகன் என அனைவரும் படத்தின் இயல்பான இளமையான ஓட்டத்திற்கு உதவியுள்ளனர்.

விஷ்ணு விஜயின் இசை, படத்தின் ஓட்டத்தோடு பார்வையாளர்களை ஒன்ற வைக்க உதவுகிறது. பின்னணி இசை எனும் பெயரில் காட்சிகளோடு ஒன்றாத இசை, அதி அற்புதமாக இருந்தால் கூட, படத்திலிருந்து நம்மை விலக்கிவிடும். சம கால தமிழ்ப்படங்களின் இரைச்சலுக்கு மத்தியில் மலையாளப் படங்களின் செளண்ட் டிசைனில் பார்வையாளர்கள் கவரப்படுவது இயல்பாய் நிகழ்கிறது.

நஸ்லெனும், மமிதா பைஜுவும் மிகச் சிறப்பான கதாபாத்திரத் தேர்வுகள். அவர்களது நடிப்பால், படத்திற்குக் கூடுதல் அழகை அளித்துள்ளனர். படத்தைத் தமிழில் சிறப்பான முறையில் மொழிமாற்றம் செய்துள்ளனர். ஜாலியானதொரு படம் பார்க்க விரும்புபவர்கள் தவற விடக் கூடாத திரைப்படம்.

1 Comment

Comments are closed.