Shadow

Razakar : The Silent Genocide Of Hyderabad (A) விமர்சனம்

இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு, நிஜாம் மிர் ஒஸ்மான் அலி கானின் ஆளுகைக்கு உட்பட்ட ஹைதராபாத் மாகாணத்தில் ஏற்பட்ட நிர்வாகக் குழப்பங்களையும், அதன் விளைவாக ஹிந்துக்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அரசு பயங்கரவாதத்தையும் பற்றிப் பேசுகிறது இப்படம். மிர் ஒஸ்மான் அலி கானை யோசிக்கவிடாமல், எப்படி காஸிம் ரஸ்வி, ரஸாக்கர் ஆயுதப்படையை உருவாக்கி ஹைதராபாத் மாகாணத்து மக்கள் மீது வரிச் சுமையையும், ஹிந்து மத சடங்குகளையும் திருவிழாக்களையும் பொதுவில் கொண்டாடத் தடையையும் விதித்தார் என்பதே படத்தின் திரைக்கதை. பாஜகவைச் சார்ந்த குடூர் நாராயண ரெட்டி, இப்படத்தை சுமார் 40 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

முதல் பாதி முழுவதுமே, காணச் சகியாக் காட்சிகளாகவே உள்ளன. ஊரைக் கொளுத்துவது, பெண்களைப் பலாத்காரம் செய்வது, எதிர்ப்பவர்களைக் கொல்வது என ரஸாக்கர்களின் கொடுமையை விரிவாகக் காட்டுகின்றனர். வரலாற்றைத் தெரியப்படுத்தும் கலை முயற்சியாக இல்லாமல், பதற்றத்தை விளைவிக்கும் அளவு தீவிரமான (Intense) காட்சி விவரணையாக இருந்தது படம். பீம்ரெட்டி நரசிம்ஹ ரெட்டி, பசவ மண்ணையா, ராதாகிருஷ்ண மோத்தாணி, நரேந்திர பண்டிட்ஜி, ராஜி ரெட்டி, பத்திரிகையாளர் ஷொயபுல்லா கான் என ரஸாகர்களை எதிர்த்த ஆண்களைப் பற்றி மட்டும் அல்லாமல், நிலத்தில் விளைந்த அறுவடைக்காகப் போராடும் சக்கலி இலம்மா, இளம்பெண்ணைக் காப்பாற்றப் போறாடும் ஜெயம்மா, தடை விதிக்கப்பட்டும் பதுக்கம்மா மலர்த் திருவிழாவைக் கொண்டாடும் போச்சம்மா, ஊருக்குத் துணை நிற்கும் ஷாந்தவ்வா என போராட்டக்களத்தில் நின்ற பெண்களின் துணிச்சலையும் சொல்லியுள்ளார் இயக்குநர் யதா சத்யநாராயணா. இதில் பெரும்பாலானவர்கள், நாட்டுப்புறப் பாடல்களின் பாட்டுடைத் தலைவராக உள்ளவர்கள்.

தலைவாசல் விஜய், பாபி சிம்ஹா, வேதிகா, நடன இயக்குநரும் நடிகருமான ராம்ஜி, ஜான் விஜய், துளசி என தமிழ் நடிகர்கள் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர். சர்தார் வல்லபாய் படேலுக்கு அடிப்பணியக் கூடாது என முடிவெடுக்கும் பொழுதாகட்டும், காஸிம் ரஸ்வியை நம்பி ஏமாந்து இந்திய இராணுவத்தின் ‘ஆப்ரேஷன் போலோ’வில் ஹைதராபாத்தை இழந்து கலங்கும் பொழுதாகட்டும், நிஜாம் மிர் ஒஸ்மால் அலி கானாக நடித்துள்ள மகரந்த் தேஷ் பாண்டே கலக்கியுள்ளார். ஹைதராபாத் மாகாணத்தை இஸ்லாம் தேசமாக மாற்ற நினைக்கும் காஸிம் ரஸ்வியாகப் ராஜ் அர்ஜுன் நடித்துள்ளார். இந்திய அரசுக்கும், ஹைதராபாத் நிஜாம்க்கும் இடையே பகை மூளக் காரணம் இவரே! ராஜு அர்ஜுன் மிகச் சிறப்பாக நடித்துக் கலவரப்படுத்தியுள்ளார். திருமலா M. திருப்பதியின் தயாரிப்பு வடிவமைப்பு படத்திற்கு மிகப் பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது. ரமேஷ் குஷேந்தர் ரெட்டியின் ஒளிப்பதிவும், பீம்ஸின் ஒலிப்பதிவும் மனதைக் கனக்கச் செய்ய உதவியுள்ளது.

தெலுங்கானாவில் நிலவிய சாதியப் பாகுபாடுகளும், அதன் தொடர்ச்சியாகக் கிளிர்த்தெழுந்த மக்கள் புரட்சியும், அவர்களுக்கு உறுதுணையாக நின்ற ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகளும், நிலப்பிரபுக்களுக்குப் பெரும் இடைஞ்சலாக இருந்துள்ளனர். நிலப்பிரபுக்கள், ரஸாக்கர்களின் உதவியை நாடியுள்ளனர். இதையும், கம்யூனிஸ்ட்களைக் காட்டாமல் படத்தில் தொட்டுச் சென்றுள்ளனர். ஆனால், ‘இத்தனை நாள் ரஸாக்கர்களை எதிர்த்த கம்யூனிஸ்ட்கள், இந்திய அரசு ஹைதராபாதிற்கு இராணுவத்தை அனுப்பியதை அறிந்து, ரஸாக்கர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்’ என்று படேலிடம் சொல்லப்படுவதாகப் படத்தில் ஒரு வசனம் மட்டும் வருகிறது.  

ஒரு மத அடிப்படைவாதியிடம் அதிகாரம் குவிந்தால் என்னாகும் என்பதற்கு காசிம் ரஸ்வியே எடுத்துக்காட்டு. அடிப்படைவாதிகள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களிடம் அதிகாரம் குவியும்பொழுது, பயங்கரமான சமூகச் சீர்கேடுகள் நிகழ்வதைத் தடுக்கவே இயலாது. ரஸாக்கர்களின் கொடுங்கோன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்பி, ஹைதராபாதிற்குள் நுழைந்த இந்திய இராணுவத்தை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். ரஸ்வி சிறையில் அடைக்கப்படுகிறார். எல்லாம் சுபம் என சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு மலர் தூவிப் படத்தைச் சுபமாக முடிக்கின்றனர்.

(பி.கு.: ஆனால், வரலாறு அதோடு முடியவில்லை. அரசாங்கம் மாறினாலும், சாமானிய மக்கள் மீதான அரச பயங்கரவாதம் மட்டும் ஓய்ந்தபாடில்லை. சுதந்திர இந்தியாவின் மிகப் பெரும் கரும்புள்ளியாக மாறியது ‘ஹைதராபாத் படுகொலைகள் (Hyderabad Massacres)’ சம்பவம். ரஸாக்கர்களால் ஏற்பட்ட பாதிப்பென K.M.முன்ஷி இந்திய அரசுக்குச் சமர்ப்பித்த அறிக்கையை விட, சுந்தர்லால் கமிட்டி சமர்ப்பித்த அறிக்கையில் ரத்தவாடையும், மனித உயிர்களின் ஓலங்களும் அதிகம்.)