Shadow

ரோமியோ விமர்சனம்

முதல் நாளே விவாகரத்து கேட்கும் மனைவியை, ஆறு மாதத்திற்குள் காதலித்து ‘கரெக்ட்’ செய்து விட நினைக்கிறார் நாயகன். மனைவியின் மனதை வென்றாரா இல்லையா என்பதே படத்தின் கதை.

‘தி லவ் பார் (TLB)’-இல் மேனேஜராகப் பணிபுரிகிறார் யோகி பாபு. விஜய் ஆண்டனி ரோமியோவாக மாற ஆலோசனை சொல்லும் பாத்திரத்தை நிறைவாகச் செய்திருந்தாலும், நகைச்சுவைக்குப் பெரிய பங்களிப்பு அளிக்கவில்லை. நடிகையாக வேண்டும் என்ற கனவை மட்டுமே சுமக்கும் பாத்திரத்தில் மிர்னாலினி ரவி நடித்துள்ளார். தன் நடிப்புத்திறமையின் மீது நம்பிக்கையாக இருப்பதை விட, ஃபோனில் வரும் அநாமதேய அழைப்பின் பாசிட்டிவ் வார்த்தைகளைப் பெரிதும் நம்பியுள்ளார். இப்படி ஏனோதானோவென்று இல்லாமல், நாயகியின் கதாபாத்திர வார்ப்பில் கவனம் செலுத்தியிருந்தால் அருமையாக இருந்திருக்கும். இப்படத்தினை விட, மெலிதான கருவாக இருந்தாலும், கதாபாத்திர வார்ப்பில் கவனம் செலுத்தியதால் பிரேமலு ரீனா தனித்துத் தெரிந்தார் என்பது நினைவில் மின்னிச் சென்றது.

விஜய் ஆண்டனியின் முகத்தில் நடிப்பு வராது என்பதைக் காட்சிகளில் மிகவும் எள்ளலாகச் சித்தரித்துள்ளனர். யோகி பாபு, விடிவி கணேஷ், மிர்னாலினி ரவி என அனைத்துப் பாத்திரங்களுமே விஜய் ஆண்டனியைக் கலாய்ப்பதாகக் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. விஜய் ஆண்டனியும், தனக்குப் பெரிதாக நடிக்க வராது என்றும், அதற்காகத் தனக்கு ஏற்றவாறு கதைகளைத் தேர்ந்தெடுப்பதாகத் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். ரொமெடி (Romedy) வகைமையில் வரும் இப்படம், பார்வையாளர்களின் வயிற்றைப் பதம் பார்க்க, நாயகனின் குறும்புத்தனங்களையும் துள்ளலையும் கோருகிறது. ஆனால், விஜய் ஆண்டனியால் தன்னை இப்படத்தில் முழுமையாகப் பொருத்திக் கொள்ளமுடியவில்லை.

படத்தின் முதல் ஃப்ரேமிலேயே, விஜய் ஆண்டனியின் மனதில் ஆழமாகப் பாதித்த ஒரு சம்பவத்தைக் காட்டுகின்றனர். கதாநாயகியிடம், தன் வாழ்நாளில் தான் தொலைத்த மிக முக்கியமான உறவு என் தங்கையின் பிரிவு என அந்தச் சம்பவத்தையே நினைவுகூர்கிறார். அத்தகைய தங்கையை நேரில் பார்த்ததும், நாயகன் எடுக்கும் முடிவு உள்ளதே, அது படத்தின் எமோஷ்னல் ஜர்னியை அதல பாதாளத்திற்கு இட்டுச் செல்கிறது. ‘இதுக்காய்யா தங்கச்சி சென்ட்டிமென்ட் வச்சு ஜோக்கு காட்டினீங்க’ என சப்பென்று போய்விடுகிறது. ஒரு நல்ல ஒன்-லைனை, அதன் சுவாரசியம் குறையாமல் திரைக்கதையாக மாற்றத் தடுமாறியுள்ளார் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன். இறுதிக் காட்சியில், இயக்குநரின் பெயர் போடும் பொழுது, முதலில் வைத்தியநாதன் என்று வந்து, பின் விநாயக் வைத்தியநாதன் என நீள்கிறது. வைத்தியநாதன் என்பவர் இயக்குநர் விநாயக்கின் தந்தையும், இப்படத்தின் இணை இயக்குநருமாவார். திரைக்கதையிலும் இதே கவனத்தைச் செலுத்தியிருந்தால், படம் கூடுதல் கலகலப்புடனும் சுவராசியத்துடனும் ரசிக்க வைத்திருக்கும்.