
தமிழ் மொழிக்கென்றே பிரத்தியேகமாக சிறப்பான படைப்புகளை வழங்கி, அசத்துகீரது ஆஹா ஓடிடி தளம். ஆஹா தளத்தின் அடுத்த படைப்பாக வெளியாகிறது “ஆன்யா’ஸ் டுடோரியல்” எனும் இணையத் தொடர். இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இத்தொடர் ஒரு புதுமையான ஹாரர் தொடராக உருவாகியுள்ளது. பாகுபலியை உருவாக்கிய ஆர்கா மீடியா ஒர்க்ஸ் இத்தொடரைத் தயாரித்துள்ளது.
ஜூலை 1 அன்று வெளியாகவுள்ள இந்த இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, “பெரிய ஓடிடி நிறுவனங்களுடன் போட்டியிடும் ஆஹாவிற்கு வாழ்த்துகள். படத்தை இயக்குவதே பெரிய சவாலான விஷயம் எனும்போது, ஒரு வெப் சீரிஸை இயக்குவது என்பது மிகப் பெரிய விஷயம். ஒளிப்பதிவாளர் விஜய் சக்ரவர்த்தி அவர் சிறப்பான விஷுவல்களை கொடுக்க கூடியவர். அவர் பணிபுரிவதை வள்ளி மயில் எனும் எனது படத்தில் பார்த்துள்ளேன்.
சிறு வயதில் பேயைப் பார்க்க ஆசைப்பட்டு பல விசயங்கள் செய்துள்ளேன். ஓஜா போர்டில் எல்லாம் முயன்று பார்த்தும், பேயை என்னால் பார்க்க முடியவில்லை. இந்தத் தொடரில் பேயை சுவாரசியமாக காட்டியிருப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.
நடிகர் S.J. சூர்யா, “அல்லு அரவிந்த் உடைய வேகம் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த விஷயத்தில் அவரை நான் ஃபாலோ பண்ணிட்டு வர்றேன். முருகதாஸ் சார் டீமில் உள்ள எனர்ஜிடிக்கான பெண் பல்லவி. அவர் இயக்கிய தொடரின் விழாவிற்கு நான் வந்தது எனக்குப் பெருமையான விஷயம். ரெஜினா எப்போதும் தன்னுடைய அழகையும், திறமையும் தொடர்ந்து கச்சிதமாக தக்கவைத்து கொண்டுள்ளார். எப்படிங்க முடியுது?” என ரெஜினாவிடம் கேட்டார்.
மேலும், “நிவேதிதா, ரெஜினா கஸண்ட்ரா இருவரும் இந்தத் தொடருக்கு பொருத்தமான தேர்வு. இருவரது முக அமைப்பும் சகோதரிகள் போல் அப்படியே இருக்கிறது. எழுத்தாளர் செளமியாவைத் தமிழுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. பாகுபலி போன்ற படைப்பை எடுத்த ஒரு நிறுவனம், தமிழில் ஒரு சீரிஸ் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது.
விஜய் ஆண்டனி, ‘பேயைப் பார்க்க ஆசை’ என்றார். ஒரு படம் எடுத்து தோல்வியடைந்தால் எல்லாப் பேயையும் பார்த்து விடலாம். ஒரு தோல்வி, உங்கள் முன் எல்லாப் பேயையும் கொண்டு வரும்” என்றார்.