Shadow

‘வாழ்த்துகள்’ படத் தோல்வியும் – சீமானின் திமிர்த்தனமும்

“வாழ்த்துகள் (2008) படம் தோல்வி அடைந்ததற்கு என்னுடைய திமிர்த்தனம்தான் காரணம். என் தாய்மொழி தமிழிலேயே எல்லா உரையாடலும் எழுதணும்னு நினைச்சேன். அதுக்கு வருத்தப்படுறேன். இந்த இனத்தில் பிறந்ததற்கு, பெருமையடையுறேன். அதே சமயம் சிறுமையும் அடையுறேன். ‘ஐ லவ் யூ’ன்னு சொல்ல வேண்டிய இடத்தில் ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ எனச் சொல்வது நெருடலாக இருக்குன்னு விமர்சனம் எழுதுறாங்க. காசி அண்ணனிடம் சொன்னேன். அன்பைக் கூட தாய்மொழியில் பரிமாறிக் கொள்ளாத ஓர் இனம் இருந்தாலென்ன, செத்தாலென்ன என்று கேட்டார். தமிழர்களுக்குத் தாய்மொழி அந்நியப்பட்டுப் போச்சு. இதை விட இழிவு வேறெதுவுமில்லை.”

– இயக்குநர் சீமான் (சீமான் செய்த துரோகம்)

வாழ்த்துகள் படத்தின் கதைச்சுருக்கம்: மாமியார், மாமனாரை நேசிக்கும், குடும்பத்தைச் சிதைக்காத மனைவி அமைந்தால் தேவலாம் என நினைக்கிறார் நாயகன். ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் அப்படியொருவரைப் பார்த்துவிட்டு, அப்பெண் படிக்கும் கல்லூரிக்குச் சென்று விடுகிறார் நாயகன். ‘ஒரு நிமிடம் பேசணும்’ எனச் சொல்கிறார். நாயகனுக்கு ஒரு நிமிடம் கிடைத்ததா, அவரது காதல் கைகூடியதா என்பதே படத்தின் கதை.

வாழ்த்துகள் படத்தின் கால அளவு 151 நிமிடங்களாகும். படத்தைக் கதையின் போக்குபடி, மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. நாயகன் யார், அவர் எவ்வளவு நல்லவர், கல்யாணத்தைக் கண்டு ஏன் அஞ்சுகிறார் என்பதைச் சொல்கிறது.

படம் தொடங்கி, 25 நிமிடங்களுக்குப் பிறகுதான் நாயகியைக் காட்டுகின்றனர். அதுவரை நாயகன் எவ்வளவு நல்லவர், அவரது சமூகச் சிந்தனை, குடும்ப உறவுகளை மதிக்கும் நாயகியை ஏன் தேடுகிறார் என கதை நீள்ள்ள்கிறது.

2. ஒரே ஒரு நிமிடம் நாயகியிடம் பேச நாயகன் எடுத்துக் கொள்ளும் முயற்சி.

படம் தொடங்கி, 40 ஆவது நிமிடத்தில்தான் நாயகன் நாயகியைச் சந்திக்கிறார். நாயகியின் வீட்டுக்குள் செல்வதற்காக, தகவல் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த நாயகன், நான்கே நாட்களில் பழைய கட்டடங்களை எப்படிப் புதுப்பிப்பதென்ற கலையைப் பயின்று விடுகிறார். நாயகி, நாயகனின் ஒரு நிமிட பேச்சைக் கேட்டு மனமகிழ்ந்து காதலை ஏற்றுக் கொள்கிறார். நாயகனுடன் இணைந்து உருகி காதற்பாட்டுக்கு நடனமும் ஆடிவிடுகிறார். காதல் சித்திக்கும் வரை, நாயகன் குழந்தைகளுக்கு பொம்மை வீடு செய்து தந்தும், பொருட்களை அங்குமிங்குமாக நகர்த்தியும் காலத்தை வளர்த்து வந்தார்.

3. நாயகியின் தாத்தா செல்வநாயகம், நாயகன் – நாயகி காதலை ஏற்காதது.

காதற்பாடல், சண்டை எல்லாம் முடிந்து, 100 ஆவது நிமிடத்தில் நாயகியின் வீட்டினர்க்குக் காதல் பற்றித் தெரிகிறது. அடுத்த 51 நிமிடங்களுக்கு, நாயகியின் வீட்டில் காதல் கூடாது, கூடவே கூடாது என முறுக்கிக் கொண்டு திரிகிறார்கள். அவர்களது காதல் எதிர்ப்பிற்கு, ஜாதி, மதம், அந்தஸ்து எதுவும் காரணமில்லை.

“இந்தக் காதல் இருக்கே, அது பொல்லாதது. அது பொய் சொல்லும். அது ஏமாத்தும். எதிர்த்து எதிர்த்துப் பேசும். அது சுத்தமான சுயநலம்” என்று சொல்லி நாயகன் – நாயகி காதலுக்குச் சிவப்புச் சமிக்ஞை காட்டுகின்றனர்.

நாயகனும், நாயகியின் தனிப்பட்ட விருப்பத்தை விட, ‘வீடுங்கிறது கோயில், அதைக் களங்கப்படுத்தக் கூடாது’ என்றெல்லாம் பேசி நாயகியைச் சமாதானப்படுத்திக் காத்திருக்கிறார்.

நாயகனாக மாதவனும், நாயகியாக பாவனாவும் நடித்துள்ளனர். பாவனா ஏற்றிருந்த கதாபாத்திரத்தின் பெயர் கயல்விழி. நாயகன், கயல்விழியோடு சேர உதவும் குணசித்திர கதாபாத்திரத்தில் நடிகை விஜயலக்ஷ்மி நடித்துள்ளார்.

ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, மறைந்த ‘கூத்துப்பட்டறை’ நா. முத்துசாமி, பேராசிரியர் மு. ராமசாமி, நடிகர் ஆர் கே, T. வேல்முருகன் (முன்னாள் பா.ம.க. சமஉ) முதலியவர்களும் படத்தில் நடித்துள்ளனர். மனதிற்கு நெருங்கிய பிரமுகர்களை நடிக்க வைக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்ட சீமான், அவர்கள் ஏற்ற கதாபாத்திரத்தை சரியாக உருவாக்கத் தவறியுள்ளார்.

சீமான் இயக்கத்தில் வெளியான ‘தம்பி (2006)’ படத்திற்குப் பின் வெளியான, ‘ரெண்டு (2006)’, ‘ஆர்யா (2007)’, ‘எவனோ ஒருவன் (2007)’ ஆகிய மாதவனின் படங்கள் சரியாகப் போகவில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். மேலும், ‘அலைபாயுதே (2000)’, ‘மின்னலே (2001)’, ‘ரன் (2002)’, ‘ஜே ஜே (2003)’ என மாதவன் நடித்த காதற்படங்களும், அப்போதைய திரையரங்கப் பார்வையாளர்களின் மனக்கண்ணில் வந்து போயிருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்க!

நாயகன் நாயகியின் உள்ளம் இணைந்துவிடுகிறது. மாதவனை ஆதுரமாய் அணைத்து, மெய்மறந்த நிலையில், “நான் உன்னை உயிருக்கு உயிராய் நேசிக்கிறேன்” என்கிறார் பாவனா. உடனே மாதவன், பாவனாவை விட்டு விலகி நடக்கிறார். சற்று தொலைவில் நின்று தீவிரமாக யோசிக்கிறார் நாயகன். நாயகி குழப்பமடைகிறாள்.

இந்த இடத்தில், நாயகியோடு சேர்ந்து பார்வையாளர்களும் குழம்பிப் பதற்றமாகி, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமரவேண்டுமென நினைத்திருப்பார் போல இயக்குநர். நாயகன் மெல்ல திரும்பி,

“நான், உன்னை என் உயிராய் நேசிக்கிறேன்” என்கிறார்.

ஓடிப் பிடித்து விளையாடி, காதற்பாட்டெல்லாம் பாடிக் களித்து முடித்த பின்பும் இப்படியாக உருட்டிக் கொண்டிருக்கிறார்கள் பிரதான கதாபாத்திரங்கள். இப்படித்தான் மொத்த படத்தின் வசனங்களும் ஓபி அடிக்கும் வகையிலேயே எழுதப்பட்டுள்ளன. ஏதோ நான் தொண்ணூறுகளின் குழந்தை என்பதால், உறக்கம் வராக் கண்களோடும், எமனின் வாகனத்தையொத்த பொறுமையோடும் படத்தைப் பார்த்து முடித்தேன். இதுவே ஈராயிரத்தின் குழந்தைகள் என்றால், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என ஐந்து நிமிடங்களையே கடந்திருக்கமாட்டார்கள்.

இப்படியாக, அசுவாராசியத்தை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்ததாலும், ஆமையின் வேகத்துக்கு ஈடு கொடுக்கத் திணறியுள்ள திரைக்கதையின் ஓட்டத்தாலுமே, வாழ்த்துகள் படம் தோல்வியானதே தவிர்த்து, ஆங்கிலம் கலக்காத தமிழ் வசனங்களால் அது நிகழவில்லை. பார்வையாளர்களை சீமான் அசட்டையாகப் பாவித்து, திரைக்கதையைக் கையாண்டதன் விளைவே வாழ்த்துகள் படத்தின் தோல்வி. கூடம் கோணல் எனப் பழிக்கும் திறனில்லா ஆட்டக்காரரைப் போல், எளிய தமிழ்த் திரைப்பட ரசிகர்களை இழிவுப்படுத்தி இருக்கக் கூடாது சீமான்.

சபாபதி (1941), திகம்பர சாமியார் (1950), பராசக்தி (1952), மனோகரா (1954), குலேபகாவலி (1955), அலிபாபாவும் 40 திருடர்களும் (1956), நாடோடி மன்னன் (1958), கர்ணன் (1964), திருவிளையாடல் (1965), இராஜராஜசோழன் (1973), இம்சை அரசன் 23ஆம் புலிகேசி (2006), பாகுபலி (2015 & 2017) முதலிய படங்கள், இப்பொழுதும் யூட்யூபிலும், பிற டிஜிட்டல் தளங்களிலும் பரவலாகப் பார்க்கப்படுகின்றன என்பதற்கு அதன் பார்வையாளர்கள் எண்ணிக்கையே சான்று.

– தினேஷ் ராம்