Shadow

SIR விமர்சனம்

வாத்தியார் மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானத்தின் தாத்தாவும் அப்பாவும் ஆசிரியராக இருந்தவர்கள். கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டும், கல்வியே எல்லாத் தளைகளில் இருந்தும் விடுதலை அளிக்கும் என உயர்ந்த லட்சியத்துடன் 1950 களில், ஒரு பள்ளியைத் தொடங்குகிறார் சிவஞானத்தின் தாத்தா. அவர் விட்ட வேலையைச் சிரமேற்கொண்டு ஆத்மார்த்தமாக ஆசிரியப் பணியைச் செய்கிறார் சிவஞானத்தின் அப்பா. உயர்நிலைப்பள்ளியாக உயர்த்த அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் வியர்த்தமாகிறது. தந்தை மற்றும் தாத்தாவின் கனவை அறியாத சிவஞானம், ஊரை விட்டு மாற்றலாகிச் சென்றுவிட நினைக்கிறார். தன் குடும்பம் எதற்காகப் போராடுகிறது என உணரும் சிவஞானம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் படத்தின் அடிநாதம்.

ஒருவரை ஒடுக்கித் தங்கள் ஆளுகைக்குள்ளேயே வைத்திருக்க வேண்டுமென்றால், அவர்கள் மனதில் மூடநம்பிக்கைகளை விதைத்து, அவர்களுக்குக் கல்வியறிவு கிடைக்காமல் பார்த்துக் கொண்டாலே போதும். சாமியாடியாக நடித்திருக்கும் ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன், ஊருக்குள் பள்ளிக்கூடம் இருக்கக்கூடாதென நினைக்கிறார். அது தன் அதிகாரத்தை நீர்த்துப் போகச் செய்யுமென்று புரிந்து வைத்துள்ளார். அவரது முயற்சியை, பொன்னரசன் வாத்தியாராக நடித்திருக்கும் சரவணன் முறியடிக்கிறார். சித்தப்பூ சரவணனுக்கு மிக வலுவான குணச்சித்தர கதாபாத்திரத்தை அளித்துள்ளார் இயக்குநர் போஸ் வெங்கட். லட்சியத்தை அடைய முடியாத விரக்தியில், தன்னைத் தானே தண்டித்துக் கொள்ளும் காட்சியில் கலங்க அடித்து விடுகிறார் சரவணன்.

கதாநாயகியாக வள்ளி எனும் கதாபாத்திரத்தில் சாயா தேவி நடித்துள்ளார். போஸ் வெங்கட்டின் முதற்படமான கன்னிமாடத்திலும், இவரே கதாநாயகியாவார். நாயகனுக்குப் புரிதல் ஏற்படும் முன்பே, கல்வி வேள்வியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்ற லட்சியத்துடன் இருக்கிறார். ஆனால், ஒரு பாடலில் சில பார்வை பரிமாற்றங்களுக்குப் பின் வழக்கமான நாயகியாக நீர்த்துப் போய் விடுகிறார்.

எப்படி சிவஞானத்துக்கு நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக்க வேண்டிய பொறுப்பு வந்து சேருகிறதோ, அப்படி ஜெயபாலனின் பேரனாக நடித்திருக்கும் சிராஜிற்கும், பள்ளியை இடிக்கவேண்டிய வன்மம் கைமாற்றப்படுகிறது. மூன்று தசாப்தமாக நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கும் கனலை, நேரம் பார்த்து இறக்குகிறார் சிராஜ். வில்லனாகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ள சிராஜ் தான் படத்தின் தயாரிப்பாளருமாவார்.

ஆசிரியர் சிவஞானமாக விமல் நடித்துள்ளார். முதற்பாதியில், அவரது வழக்கமான பாணியில் கலகலப்புக்கு உதவினாலும், பொறுப்பைச் சுமக்கும் போது கலங்க வைத்துள்ளார். போகுமிடம் வெகுதூரமில்லை படத்தினைத் தொடர்ந்து, அழுத்தமானதொரு பாத்திரம் வாய்த்திருக்கிறது அவருக்கு. போஸ் வெங்கட்டின் முதல் படம் போலவே, அதிர்ச்சிகரமான க்ளைமேக்ஸ் மூலம், சமூகத்தின் கோர முகத்தையும், அதை பொறுத்துக் கொள்ள முடியாத தனிமனிதனின் மனசாட்சியையும் அழுத்தமாகப் பதிந்துள்ளன படம். முதல் படத்தில் ஆணவக் கொலையைக் கருவாக எடுத்தவர், இப்படத்தில் கல்விக்கான தேவையையும், அது அனைவருக்கும் கிடைத்துவிடக் கூடாது என்று நினைப்பவர்களின் சதியையும் சாதியம் கலந்து சொல்லியுள்ளார் போஸ் வெங்கட்.