பேட்மேன் (PadMan) படத்தினைத் தொடர்ந்து, ‘சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷ்னல் ப்ரொடெக்ஷன்ஸ் (Sony Pictures International Productions)’ நிறுவனம், ஜிந்தியில் ‘102 நாட் அவுட்’ எனும் படத்தைத் தயாரித்து வருகிறது. 27 வருடங்களுக்குப் பிறகு, 102 நாட் அவுட் படத்தில் அமிதாப் பச்சனும், ரிஷி கபூரும் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக ஹிந்தி சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த, சோனி பிக்சர்ஸ் முதன்முறையாக ஒரு தென்னிந்தியா சினிமாவைத் தயாரிக்கவுள்ளது.
மலையாள நடிகர் பிரித்விராஜ், தனது மனைவியுடன் இணைந்து தொடங்கியுள்ள “பிரித்விராஜ் ப்ரொடக்ஷன்ஸ்” நிறுவனத்துடன் சோனி பிக்சர்ஸ் கைகோர்க்கவுள்ளது. ஏப்ரல் மத்தியில் தொடங்கவுள்ள இப்படமே, பிரித்விராஜ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதற்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
“வேகமாய் வளர்ந்து வரும் பிராந்தியச் சந்தையில் நுழைய நல்லதொரு தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். பிரித்விராஜுடனான இந்தக் கூட்டணி, எங்களுக்கு மிகச் சிறந்த தொடக்கமாக அமைந்துள்ளது” என்கிறார் சோனியின் தலைமை நிர்வாகி லெயின் க்ளின்.
“மலையாள சினிமாவிற்கு இது ஒரு மைல்கல் என்றே சொல்லவேண்டும். 2012, ஸ்பைடர் மேன், ஜுமான்ஜி, பேட்மேன் என பிரம்மாண்ட தயாரிப்புகளில் ஈடுபட்டு வரும் சோனியை, ஆழமான கதையம்சமுடைய சிறிய மலையாளப் படவுலகிற்கு வரவேற்கிறோம். எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து முதற்படம் பற்றிய அறிவிப்பினை விரைவில் வெளியிடுவோம்” என்றார் பிரித்விராஜ்.