Shadow

சுத்தானந்த பாரதியின் திருக்குறள் ஒலிபெயர்ப்பு

Aaruthra-Gnanasambandhan

வில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா.விஜய் நாயகனாக நடித்துத் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்தப் படத்திற்கு, ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் பேசுகையில், “இது போன்ற விழாக்களில் லேசாக பேதை, பெதும்பை, ரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனத் தமிழில் பேச ஆரம்பித்துவிட்டால், உடனே செல்ஃபோனை எடுத்துக் காதில் வைத்து கொண்டு, ‘மாப்ள இதோ வந்துவிட்டேன்’ என்று எழுந்து விடுகிறார்கள். இங்குள்ள நடிகைகளில் பலரும் தமிழ் தெரியவில்லை என்றாலும் தமிழில் பேச முயற்சி செய்கிறார்கள். இதற்காகத் திரையுலகினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பள்ளிக்கூடங்களில் கூட தமிழ் இல்லாத இடத்தில் இவர்களையெல்லாம் திரையில் தமிழில் பேச வைத்திருப்பதற்கு இயக்குநர் பா.விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் எனக்கு ஒரு வெயிட்டான கேரக்டர் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பா.விஜய். அதை நீங்கள் படத்தில் நான் தோன்றும் முதல் காட்சியில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். படத்தில் நான் ஏற்றிருக்கும் கேரக்டரை, உடன் நடித்த பாக்யராஜ் அவர்களால் கூட உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. அது போன்ற ஒரு வித்தியாசமான கேரக்டரை எனக்கு இயக்குநர் கொடுத்திருக்கிறார்.

தமிழில் எதுகை மோனை என்று எழுதலாம். பேசலாம். ஆனால் ஆங்கிலத்தில் முடியுமா என்றால் அது கஷ்டம் தான். ஆனால் அதனை இந்தப் படத்தில் நான் செய்திருக்கிறேன். இதற்காக மறைந்த முன்னாள் நடிகர்களின் குரல்களில் பேச வைத்திருக்கிறார் இயக்குநர். நீங்கள் திருக்குறளை பலர் மொழி பெயர்ந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் திருக்குறளைச் சுத்தானந்த பாரதி என்பவர் ஒலிபெயர்ப்பு செய்திருப்பார். ‘சீ மீ அண்ட் த லேடி, பிட்வின் சோல் அண்ட் த பாடி’ என்று எழுதியிருப்பார். இதே போல் 1330 குறள்களுக்கும் எழுதியிருப்பார். இதனை படத்தில் எனக்காக மாற்றியமைத்து எழுதியிருக்கிறார் பா.விஜய். அதனால் இந்த படம் ரசிகர்களுக்கு உற்சாகமாக இருக்கும்” என்றார்.

இயக்குநர் பா.விஜய், “இந்தப் படத்தில் பேராசிரியர் ஞானசம்பந்தன் இரண்டு கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். அவர் படம் முழுவதும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவார். அவரது நடை, உடை, தோற்றம் அனைத்தும் மேலைநாட்டவர் போல் அமைந்திருக்கும். இது ரசிகர்களை ஈர்க்கும்” என்றார்.