ராக்கெட்ரி: நம்பி விளைவு விமர்சனம்
நம்பி நாராயணனுடைய வரலாற்றுப் படம் (Biopic) எடுக்கிறார்கள் எனும்போதே எனக்கு இயல்பாக ஆர்வம் எழுந்தது. 90களின் சமயத்தில்தான், இந்திய பத்திரிகைத் துறையில் இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் மையம் கொண்டிருந்தது. இப்படியெல்லாம் நடப்புலகின் புதிரான சம்பவங்களை அம்பலப்படுத்துவது அல்லவா பத்திரிகை தர்மம் என்று மிகவும் உணர்ச்சி மேலீட்டோடு கவனித்து வந்த பல வழக்குகளில் ஒன்று நம்பி நாராயணன் வழக்கு.
பிறகு அவர் ஜாமீனில் வெளிவந்தது, அவர் மேலான குற்றசாட்டுகள் நிரூபணம் ஆகாமல் சிபிஐ கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி ஆனதெல்லாம் நடந்ததும், பத்திரிகைகள் அவர் மேல் கவிந்த வெளிச்சத்தை விலக்கிக் கொண்டுவிட்டன.
பத்திரிகைகளால் அதிகம் கண்டுகொள்ளப்படாத அந்தக் காலகட்டத்திலும், நம்பி நாராயணன் தன் மீது அபாண்டமாகப் போடப்பட்ட தேசத்துரோக களங்கத்தைப் போக்கிக் கொள்ள தொடர்ந்து சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டு வந்திருக்கிறார். உச்சநீதிமன்றம்...