அசோகமித்திரன்: ஆரவாரமில்லா எழுத்து – வைரமுத்து
எழுத்துலகில் நல்லெழுத்து, வணிக எழுத்து என்று இரண்டு உண்டு. வணிகச் சந்தையிலும்கூட நல்லெழுத்தே எழுதியவர் அசோகமித்திரன். அவரெழுத்தில் ஆரவாரமில்லை. அலங்காரங்களின் அணிவரிசையில்லை. சத்தியம் மட்டும் அவர் எழுத்தில் தகித்துக் கிடந்தது.
ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு மரணம் நேர்கிறது. உடலுக்கு நேரும் மரணத்தால் ஒரு மனிதன் முதல்முறை மரிக்கிறான். அவனுக்குப் பிறகும் அவனை நினைத்துக்கொண்டேயிருக்கும் சமூகத்தின் கடைசி மனிதன் மரிக்கும்போது இரண்டாம் மரணம் எய்துகிறான். அசோகமித்திரனை நினைக்கும் மனிதர்கள் இன்னொரு நூற்றாண்டிலும் இருப்பார்கள். அதனால் இப்போதைக்கு அவருக்கு இரண்டாம் மரணம் இல்லை.
நடுத்தர வர்க்கத்தின் வாழ்வின் வலியை அவரைப்போல் எதார்த்தமாக எழுதியவர்கள் குறைவு. ‘கரைந்த நிழல்கள்’ என்ற நாவலில் ஒரு தயாரிப்பாளரையும் ஒரு நடிகையையும் படைத்திருக்கிறார். “படப்பிடிப்புக்கு வரமாட்டேன் என்று ஓர் இளம் நடிகை அடம்பிடி...