கண்ல காச காட்டப்பா விமர்சனம்
தொடக்கத்தில் லேசான தடுமாற்றம் ஏற்பட்டாலும், கலகலப்பான படத்திற்கு உத்திரவாதம் அளித்துள்ளார் மேஜர் கெளதம். எம்.எஸ்.பாஸ்கரும், யோகி பாபுவும் தமது டைமிங் சென்ஸாலும், மாடுலேஷனாலும் 2 மணி நேரத்திற்கும் குறைவான படத்தைக் கரையேற்றியுள்ளனர்.
கழிவறை கட்டும் திட்டத்தில் தமிழக அமைச்சர் ஊழல் செய்து சுருட்டிய 100 கோடியைக் கொலம்பியா வங்கியில் டெப்பாசிட் செய்ய, முதற்கட்டமாக ஹவாலா மூலம் மலேஷியா அனுப்பி வைக்கப்படுகிறது. அப்பணத்தை நாயகன், நாயகிகள், நகைச்சுவை நடிகர்கள் என மொத்தம் 8 பேர் திருட முனைகின்றனர். அமைச்சரின் பணம் யார் கையில் சிக்குகிறது என்பதுதான் படத்தின் கதை.
கெட்டவனாக யோகி பாபு. டானாக (Don) வரும் கல்யாண் மாஸ்டரின் உதவியாளாக வருகிறார். படத்தில் சகட்டுமேனிக்கு அனைவரையும் கலாய்க்கிறார். "இருபது கோடி!!" என அதிசயித்து, "டொன்ட்டி லேக்ஸ்" என அவர் முடிக்கும் பொழுது திரையரங்கில் சிரிப்பொலி எழுகிறது.
...