இந்த க்ரைம் தப்பில்ல விமர்சனம்
ஒரே நேரத்தில் மூன்று ஆண்களை காதலிக்கும் இளம் பெண். அதே நேரம் வரிசையாக ஒரு வழக்கோடு சம்பந்தப்பட்ட சில முக்கியப் புள்ளிகளை கடத்தி கொலை செய்து வரும் ஓர் இளம் படை. இந்த இரண்டுக்குமான தொடர்பே ”இந்தக் க்ரைம் தப்பில்ல” படத்தின் ஒன்லைன்.
தேவகுமார் இயக்கத்தில் மதுரா புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில், உருவாகி இருக்கும் இப்படத்தில் ஆடுகளம் ‘நரேன்’ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இவரோடு சின்னத்திரை புகழ் பாண்டி கமல், மேக்னா ஈழன், முத்துக்காளை மற்றும் புதுமுக நடிகர் நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.
பழிவாங்கும் இளைஞர் படையை முன்னின்று நடத்தும் கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன் நடித்திருக்கிறார். படம் முழுவதும் காலில் அடிபட்ட நிலையில் உட்கார்ந்து கொண்டே இளைஞர்களை ஒன்று திரட்டி வழிநடத்தும் கதாபாத்திரம். கொடுத்த கதாபாத்திரத்தை எவ்வளவு சிறப்பகா செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறார்.
...