
அறத்தைப் பரிகசிக்கும் ஒற்றைச் செருப்பின் அபாய அரசியல்
'ஒன் மேன் ஷோ'வாய் ஒரு திரைப்படத்தில் தான் மட்டுமே திரையில் தெரியவேண்டும் என்பது பார்த்திபனின் பல்லாண்டு கனவு. திறன்மிகு தொழில்நுட்பக் கலைஞர்களின் உதவியோடு, அக்கனவை ஒத்த செருப்பு சைஸ் -7 என்ற நேர்த்தியானதொரு படத்தின் மூலம் நனவாக்கிக் கொண்டுள்ளார். எழுதி, தயாரித்து, இயக்கி, ஒற்றை ஆளாய் நடித்ததன் மூலம், ஒத்த செருப்பு படத்தை, 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்', 'ஏஷியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' ஆகியவற்றில் சாதனையாக இடம்பெற வைத்துவிட்டார் பார்த்திபன்.
அதி அற்புத முயற்சி, தொழில்நுட்ப அதிசயம் என்ற தனித்த அடையாளத்தைப் பெற்றாலும், இப்படைப்பின் பேசுபொருள் எவ்வித அறத்தையும் பேணாதது மிக துரதிர்ஷ்டவசமானது. ஒரு படைப்பு எதைப் பேசுகிறது என்பதை வைத்து மட்டுமே அந்தப் படத்தின் கலையம்சத்தைத் தீர்மானிக்க இயலும். அன்பையோ, அறத்தையோ மையக்கருவாகக் கொள்ளாமல், மனித மனதைப் பற்றிய விசாரமும் செய்யாமல், படத்தில் நிகழும் நான...