என்னுள் ஆயிரம் விமர்சனம்
அனைவரின் மனதிலும் ஆயிரமுண்டு. சந்தர்ப்பங்களைத் தவறவிடக் கூடாதென, எதையுமே தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள நினைக்கும் அஷோக்கிற்குள்ளும் ஆயிரமுள்ளது. அதிலொன்று கை நழுவிப் போய்விடுமோ என்ற பதற்றத்தில் இசைக்கேடான செயலொன்றைப் புரிந்து விடுகிறான். அதனால் அவனுள்ளிருந்த ஆயிரமும் எப்படி ஒன்றில்லாமல் போகிறது என்பதே படத்தின் கதை.
அஷோக் எனும் பாத்திரத்தில் நாயகனாக அறிமுகமாகியிருக்கார் டெல்லி கணேஷின் மகன் மஹா. தன் மகனுக்காக, இந்தப் படத்தையும் தயாரித்துள்ளார் டெல்லி கணேஷ். இப்படியொரு கதையை, முதற்படமாக நடிக்கத் தேர்ந்தெடுக்கவே ஒரு துணிவு வேண்டும். குறிப்பாக படத்தின் முதல் பாதி கதை.
5 ஸ்டார் ஹோட்டலின் பாரில் வேலை செய்பவராக மஹா. நாயகனாக மனதில் பதிய மறுத்தாலும், நாம் அன்றாடம் பார்க்கும் ஒரு நபராக அவரைச் சுலபமாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. குடித்து விட்டு அஷோக் மழைக்கு ஒதுங்குமிடத்தில் ஆர்த்தியும் ஒதுங்குகிறார்; ...