ஆபரேஷன் அரபைமா – முப்படையில் பணியாற்றிய இயக்குநரின் மிலிட்டரி ஆப்ரேஷன் படம்
பி. நடராஜன் வழங்கும் ஆபரேஷன் அரபைமா படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார், முன்னாள் கப்பற்படை வீரர் பிராஷ். ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், நேகா சக்ஸேனா, ஷிகாத், பாலாஜி உள்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் மார்ச் 7 ஆம் தேதி அன்று நடைபெற்றது. அரபைமா என்பது ஒரு வகை மீனாகும். அதன் குணநலங்களைப் பிரதிபலிக்கும்படியாக ஓர் இராணுவ ஆபரேஷனுக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அவ்விழாவில் பேசிய இயக்குநர் பிராஷ், “நேற்று என் படத்தின் ட்ரைலரை முதன் முதலாக பிரசாத் லேப் தியேட்டரில் செக் பண்ணும்போது ரொம்ப உணர்ச்சிவசப்பட்டேன். ஊரில் எனது அம்மா பெயரில் ஒரு திரையரங்கம் இருந்தது. என் அப்பாவை சிலர் ஏமாற்றி விட்டார்கள். அந்த திரையரங்கத்தை அபகரித்துக் கொண்டார்கள். ஆனாலும் நான் சினிமாவை விடவில்லை. சினிமா என்னைக் கைவிடவில்லை. பெற்றோருக்குத் தெரியாமல் சினிமாவைக் கற்றுக் கொண்டேன். ...