பெர்முடா | நாவல் விமர்சனம்
கேபிள் சங்கரின் பெர்முடா நாவல், மூன்று ஜோடிகளின் பொருந்தாக் காமத்தைப் பற்றிப் பேசுகிறது. மூன்று ஜோடிகளிலுமே ஆண் மூத்தவராகவும், பெண் இளையவராகவும் உள்ளார். பெர்முடா எனும் தலைப்பினை ஒரு குறியீட்டுப் பெயராகக் கொள்ளலாம். பொருந்தாக் காமம் எனும் கவர்ச்சியான ஈர்ப்பில் அந்த ஜோடிகள் சிக்குகின்றனர். அந்தப் பொல்லாத ஈர்ப்பு அவர்களைத் தன்னுள் இழுத்துப் புதைத்துக் கொள்கிறதா அல்லது அந்த ஈர்ப்பிலிருந்து லாகவமாய் வெளியேறி விடுகின்றனரா என்பதுதான் நாவல்.
பொருந்தாக் காமத்திற்குத் தொல்காப்பியர் சூட்டும் பெயர் “பெருந்திணை.” அதை மேலும் நான்கு வகைகளாகப் பிரிக்கிறார். அதில், இரண்டாம் வகையான ‘இளமைதீர் திறம்’ என்பதில்தான் நாவலின் அச்சாணி சுழல்கிறது. இளமை நீங்கிய நிலையில் கொள்ளும் காதல் என்பதே ‘இளமை தீர் திறம்’ ஆகும். ஆனால் ஒருவரின் வயதைக் கொண்டு இளமை தீர்ந்தது என எப்படிச் சொல்ல முடியும்? வயதைக் கொண்டு பருவ நிலை...