
சப்தம் விமர்சனம்
ஓர் அமானுஷ்ய சக்தி, சத்தத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. அதனால் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள, அவ்வாமானுஷ்யத்தைப் புலனாய்வு செய்ய புலனுக்கெட்டாத (Paranormal) மர்மத்தைக் கண்டுபிடிக்க, மும்பையில் இருந்து ரூபன் வைத்தியலிங்கம் மூணாருக்கு வரவைக்கப்படுகிறார். அந்தச் சத்தத்தின் பின்னாலுள்ள மர்மத்திற்கான பதிலே இப்படத்தின் கதையோட்டம்.
ஈரம் படத்திற்குப் பிறகு, ஆதி, இசையமைப்பாளர் தமன், இயக்குநர் அறிவழகன் ஒன்றிணைந்துள்ளனர். நீரை மையமாகக் கொண்டு ஈரத்தில் கலக்கியவர்கள், இதில் சத்தத்தைத் தொட்டுள்ளனர். ஒலியைப் பயன்படுத்தியிருக்கும் விதத்தில், தொழில்நுட்ப ரீதியாக இப்படம் மிகப் பெரும் பாய்ச்சலைச் செய்துள்ளது. சினிமா விஷுவல் மீடியம் எனச் சொல்லப்பட்டாலும், அது உண்மையில் மல்ட்டி மீடியாவாகும். அதன் ஒரு பகுதியான ஒலியைக் கொண்டு ஒரு கதையைச் சொல்லியுள்ளனர். படத்தின் முதற்பாதி ஈர்ப்பிற்கு அதுவே காரணமாக அமைக...