அக்கரைக்கு இக்கரையே பச்சை!
இந்த முறை ஆல்பனியில் இருந்து கலிஃபோர்னியாவுக்கு, அதாவது கிழக்குக் கரையில் இருந்து மேற்குக் கரைக்குப் பயணம். வெறும் சுற்றுலா என்பதோடு மட்டுமில்லாமல் பல வகையில் எங்களுக்கு இது முக்கியமான பயணம். கடைசி நேரத்தில் வீட்டை ஒழுங்கு செய்து, எல்லோரையும் நேரத்துக்குக் கிளப்பிவிடும் வழக்கமான களேபரங்களை எல்லாம் சமாளித்து, அதிகாலை விமான நிலையம் வந்திறங்கினால், தன்னுடைய கேமரா பையை வீட்டில் மறந்து வைத்துவிட்டேன் எனச் சொல்லி கணவர் மட்டும் திரும்ப வீட்டுக்குப் போய் வந்து, ஒருவழியாய் செக்கிங் சம்பிரதாயங்களை முடித்து விமானத்தில் உட்காரும் வரை பதட்டமோ பதட்டம்தான். ஊரே தூங்கிக் கொண்டிருக்கையில் விமானநிலையம் மட்டும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.
இருள் விலகாத, அதிகாலை விமானப் பயணங்கள் எப்போதுமே சுகமானவை. சூரிய உதயத்தை மேலிருந்து பார்க்கும் வாய்ப்பு. குடும்ப வழக்கத்தின்படி யாருக்கு ஜன்னலோர சீட் கிடைத்தாலும்...