அவதார் 2 விமர்சனம்
பலவருட கனவும், பதிமூன்று வருட உழைப்பும், அவதார் 2 ஆகத் திரை கண்டுள்ளது.
ஒரு முழுமையான படமாகப் பார்த்தால் எந்தவிதத்திலும் குறைவில்லாத திரைப்படம் அவதார். எந்த ஒரு தருணத்திலும் நம் கண்களைத் திரையை விட்டு அகலச் செய்யாத காட்சிகள். உணர்வுபூர்வமான பல தருணங்கள் என்று சிற்சில மாயாஜாலங்கள் நிகழாமல் இல்லை. ஆனாலும், அவதார் ஒன்றுடன் சடுதியில் நிகழ்ந்துவிட்ட இணைப்பு அவதார் இரண்டில் நடக்கவில்லை என்பது மட்டுமே உள்ளுக்குள் இருக்கும் ஒரே உறுத்தல்.
மூன்றே கால் மணி நேரப்படத்தில், முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்குமான இணைப்புக் கதையாகச் சொல்லப்படும் கதையை அவசர அவசரமாக சொல்லிச் சென்றது கூட அந்த இணைப்பை உருவாக்கத் தவறியிருக்கலாம். அத்தனை நாவிக்கள் செத்துக் கிடக்கும்போது, நாயகன் தன் குழந்தையை மட்டும் தேடிப் பரிதவிக்கும் காட்சியினால் கூட அந்த விலகல் ஏற்பட்டிருக்கலாம். காரணம், நாயகன் தன் குழந்தைக்கு அப்பன் ...