மாயவன் விமர்சனம்
கொலை செய்பவன் இறந்து விடுகிறான். ஆனாலும், ஒரே மாதிரியான கொலைகள், கொலையாளி இறந்த பின்னும் தொடர்ந்து நடக்கின்றன. யார் இக்கொலைகளைச் செய்வது, எப்படிச் செய்யப்படுகிறது என்பது தான் மாயவன் படத்தின் கதை.
மாயவன் – யார் கண்ணுக்கும் தெரிவதில்லை; அவனுக்கு இறப்பும் நேருவதில்லை. உடல்களை மட்டும் மாயவன் மாற்றிக் கொண்டே இருக்கிறான். ஆனால், இது கூடு விட்டு கூடு பாயும் கதையில்லை.
தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கும் முதல் படமிது. நேரத்தை வளர்க்காமல் முதல் ஃப்ரேமிலேயே கதையைத் தொடங்கி அசத்தி விடுகிறார். அதுவும் படம் தொடங்கிய ஓரிரு நிமிடங்களிலேயே, ஒரு கொலைச் சம்பவத்தைப் போலீஸ் அதிகாரி ஒருவர் பார்க்க நேரிடுகிறது எனச் சுவாரசியமான ஒரு காட்சியினை வைத்து, பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார். படத்தொகுப்பாளர் லியோ ஜான் பாலும், இசையமைப்பாளர் ஜிப்ரானும், அந்த விறுவிறுப்பைக் கடைசி வரை தக்க வைக்க உதவியுள்ளனர...