
வருணன் விமர்சனம் | Varunan: God of Water review
அய்யாவு, ஜான் ஆகிய இருவரும் தங்களுக்குள்ளான புரிதலில், ஒரே ஏரியாவில் பிரச்சனையின்றி தண்ணீர் கேன் வியாபாரம் செய்கின்றனர். ஜானின் மச்சான் தண்ணீர் கேனில் சுண்டக்கஞ்சி விற்க, போலீஸ் ஜானின் வியாபாரத்தை முடக்குகிறது. பின், அந்தப் போலீஸே தண்ணீர் கேன் வியாபாரத்தில் ஜானின் பங்குதாரராக, பிரச்சனையின்றி நடந்த வந்த தண்ணீர் கேன் வியாபாரத்தில் போட்டியும் சண்டையும் நுழைகிறது.
அய்யாவுவிடம் வேலை செய்யும் தில்லையும் மருதுவும், ஜானின் மச்சான் டப்பாவின் கோபத்திற்கு ஆளாகின்றனர். தில்லையை சிட்டு எனும் பெண் காதலிக்க, மருதுவை அக்னி எனும் பெண் காதலித்துத் திருமணம் புரிகிறார். தில்லையாக துஷ்யந்த் ஜெயப்பிரகாஷும், மருதுவாக பிரியதர்ஷனும், சிட்டுவாக கேப்ரியலாவும், அக்னியாக ஹரிப்ரியாவும் நடித்துள்ளனர். அனைவரும் மிக இளமையாக உள்ளனர். ஒரு தசாப்தத்திற்கு முன் உருவாகியுள்ள படம்.
அய்யாவுவாக ராதாரவியும், ஜானாகச் சரண்ராஜும், க...