அம்மணி விமர்சனம்
சினிமாத்தனங்கள் அற்ற மீண்டும் ஓர் ஆரோகணத்தைத் தந்துள்ளார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன். 'ஜீ தமிழ்' சேனலில் தொகுத்தளித்த 'சொல்வதெல்லாம் உண்மை' எனும் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட வாலாம்பா பாட்டியின் வாழ்க்கையால் கவரப்பட்டு, இப்படத்தை இயக்கியுள்ளார் லட்சுமி.
கைக்குக் கை மாறும் 'மணி (money)' இருக்கே, அம்மணி மீதே படத்தின் கதாபாத்திரங்களுக்கு கண். ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் உடைய ஒவ்வொரு குடும்பமும் காலங்காலமாக எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையைப் பற்றி விரிவாகப் பேசுகிறது அம்மணி படம். அரசு மருத்துவமனையில் துப்புறவுத் தொழிலாளியாக இருக்கும் சாலம்மாவிற்குக் கணவரில்லை. அவரது மூத்த மகனுக்கு 10 வயது இருக்கும் பொழுதே அவரது கணவர் இறந்து விடுகிறார். மகளோ ஒரு ரெளடி எனப் பெயரெடுத்த அடாவடியான ஆளுடன் ஓடி விடுகிறாள்; மூத்த மகனோ குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெயின்ட்டர்; இளைய மகனோ மனைவியின் பேச்சிற்கு ஆடும் ஆட்டோ...