M.S.தோனி விமர்சனம்
இந்திய அணிக்கு மட்டுமில்லாமல், ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’-க்கும் கேப்டனாக இருந்து, தமிழ் ரசிகர்களுக்கு மேலும் நெருக்கமானவர் நாயகன் தோனி. தமிழகத் திரையரங்குகளில் ரசிகர்கள் ‘விசில் போட்டு’ உற்சாகத்தில் மிதக்க இந்தவொரு காரணம் போதாதா?
பயோபிக் வகை படமென இதைக் கூற முடியாது. அவர்களே தெளிவாகக் குறிப்பிட்டும் விடுகின்றனர். நாயகனை வியந்தோதும் மற்றுமொரு இந்தியப் படமே! ஆனால், சமகால விளையாட்டு வீரரைப் பற்றிய படம் என்பதே அனைத்து விசேஷங்களுக்குமான காரணம். இந்தப் படம், அதீத பாசிடிவ் எனர்ஜியைத் திரையரங்குகளில் பரப்புகிறது. தோனியின் வெற்றி என்பது இந்திய அணியின் வெற்றி, இந்தியாவின் வெற்றி எனப் படம் முடிந்தாலும், இது தோனி மீது நம்பிக்கை வைத்திருந்த அவரது நண்பர்களின் வெற்றியாகவே மனதில் ஆழப் பதிகிறது.
‘தோனி கீப்பிங்கிற்கு சரிபடுவான்’ எனக் கணிக்கிறார் அவரது பயிற்சியாளர். இந்தியா உலகக் கோப்பையை வெல்லும்பொழுது, க...