Shadow

தமிழ்க்குடிமகன் விமர்சனம்

ஊருக்குள் ஒரு பெரிய வீட்டிற்குள் சாவு விழுந்துவிடுகிறது. அந்த ஊரில் பிணத்திற்கு சடங்கு சம்பிரதாயங்கள் செய்யும், குடிமகன் என்று பொதுவாக அழைக்கப்படும் சின்னச்சாமி (சேரன்) கதாபாத்திரம் தனக்கு முன்பு நேர்ந்த அவமானகரமான நிகழ்வுகளால்,  பிணத்திற்கு சடங்குகள் செய்து அடக்கம் செய்யும் வெட்டியான் பணியை விட்டுவிட்டு வேறு தொழில் செய்து பிழைத்து வருகிறான்.  ஒட்டுமொத்த ஊரும் அவனை இறந்த பெரியவருக்கு இறுதிச்சடங்கு செய்து தான் ஆக வேண்டும் என்று அவனை வற்புறுத்த,  மிரட்ட, அந்தத் தொழிலை இனி தன் வாழ்நாளில் தான் ஒரு போதும் செய்யப் போவதில்லை என்று சின்னச்சாமி திடமாக முடிவு செய்து ஒட்டு மொத்த ஊரையும் எதிர்த்து நிற்கின்றான். இதன் முடிவு என்ன ஆனது என்பதே இந்த தமிழ்க்குடிமகன் பேசும் அரசியல்.

சமகால சமூக நிகழ்வுகளையும், சாதிய நிகழ்வுகளையும் அரசியல் நிகழ்வுகளையும் முன்னிட்டுப் பார்க்கும் போது தமிழ்க்குடிமகன் ஒரு தவிர்க்க முடியாத ஒரு படமாக மாறுகிறது. ஏனென்று கேட்டால்,  ஒருவன் செய்யும் குலத் தொழிலை வைத்து அவனது சாதி நிர்ணயம் செய்யப்பட்டு சனாதன தர்மத்தின்படி அவனின்படிநிலை முடிவு செய்யப்படும் அதர்மமான சூழல் இன்னும் அழியாமல் ஆங்காங்கே உலவி வரும் சூழலில் அப்படி இழிவாகப் பார்க்கப்படும் குலத்தொழிலை விட்டு எல்லோரும் வெளியேறுங்கள், அந்த தொழிலினால் நிறைவேற்றப்படும் பணி தேவையாக இருக்கும் ஒருவன் எந்த சாதியை சேர்ந்தவனாக இருந்தாலும்  அவனே அப்பணியை  செய்து கொள்ளட்டும். அப்படி செய்தால் தான் இந்த சாதிய வேறுபாடுகள் கலையும் என்கின்ற கருத்தை முன்னெடுத்துப் பேசி இருப்பதால் “தமிழ்க்குடிமகன்” தவிர்க்க முடியாத  படமாக ஆகிறது.

சின்னச்சாமி கதாபாத்திரத்தில் சேரன்.  சில செயற்கையான முகபாவங்களைத் தவிர்த்து பல இடங்களில் அழுத்தமான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.  அதிலும் குறிப்பாக  இறந்த சடலத்திற்கு  சடங்குகள் செய்யும் குடிமகன் என்னும்  தன் அடையாளத்தை மாற்ற முனைந்து, ஒவ்வொரு முயற்சிகளும் சூழ்ச்சிகளால் தோற்றுப் போகும் போதும் அவர் வெளிப்படுத்தும் வேதனை நம்மை புண்படுத்துகிறது.  காந்தி பெரியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வேல ராமசாமியின் நடிப்பும் மிகையின்றி அற்புதமாக இருக்கிறது.

இந்த இருவரைத் தவிர்த்துப் பார்க்கும் போது,  நடிப்பில் மீண்டும் ஒரு அசுரப் பாய்ச்சலை நிகழ்த்தி இருப்பர் மலையாள நடிகர் லால் தான்.  அந்த சாதி ஆணவத்தையும்,  தன்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என்கின்ற கையறு நிலையில் நிற்கும் போது  வெதும்பும் அவரது உடல்மொழியில் அவ்வளவு வெம்மை.  அதே போல் இறுதிக்காட்சியில் சடங்குகள் செய்ய யாரும் அற்ற நிலையில் தன் மகனே அந்த இறுதிச்சடங்குகளை முன் எடுக்கும் போது, பித்துப் பிடித்த மனநிலையில் சாதி சமய சடங்குகளைத் தூக்கியெறியும் ஆணவமும் வன்மமும் மாறாத அந்தக் கோபம் நம் கண் முன் நிற்கிறது.  லால்-இன் மாப்பிள்ளையாக வரும் அருள்தாஸும் தன் பங்கிற்கு நடிப்பில் அட்டகாசம் செய்கிறார். குறிப்பாக சேரன் தங்கையை எட்டி உதைத்து அடித்து நொறுக்கும் காட்சியில் சாதி என்னும் விஷம் தலைக்கேறிய ஒரு மனித மிருகத்தை நம் கண் முன் நிறுத்துகிறார்.

இவர்கள் தவிர்த்து வரும் பிற கதாபாத்திரங்களில் கவனிக்கும்படி நடித்திருப்பவர் சேரனின் தாயாக நடித்திருப்பவர். குறை சொல்ல முடியாத நடிப்பு.  வக்கீல்களாக நடித்திருக்கும் இயக்குநர் எஸ்.ஏ,சந்திரசேகரும், ரவிமரியாவும் இருக்கிறார்கள் அவ்வளவே. அது போல் படத்தின் அடிநாதமாக இருக்க வேண்டிய நீதிமன்றக் காட்சிகள் வீரியம் குன்றிப் போய், ஏதோ டீக்கடை விவாதம் போல் சுவாரஸ்யமும் காரசாரமுமின்றி சாதாரணமாக கடப்பது பெரும் குறை.

அது போல் நல்ல கதை கிடைத்தும், அதை கலை ரீதியில் ஒரு நல்ல திரைக்கதையாக மாற்றாததும், அழுத்தமான காட்சிகள் இன்றி, பார்த்துப் பழகிய காட்சிகளும் எளிதாக யூகிக்கக் கூடிய காட்சிகளும் அடுத்தடுத்து வந்து கொண்டே இருப்பதும் திரைப்படத்தின் பலகீனங்கள்.  அது போல் பெரும்பாலான வசனங்கள் வெறும் நல்ல கருத்துக்களாகவே உதிர்க்கப்படுகின்றன. அது  பார்வையாளர்களாகிய நம் உணர்வோடு கலக்கக்கூடிய வகையிலோ அல்லது தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியல் வலியோடு கலந்த உணர்வெழுச்சிகளாகவோ வெளிப்படாததும் தமிழ்க்குடிமகனின் குறைகள்.

சாம் சி.எஸ் படத்தின் கதையை தெளிவாக உள்வாங்கிக் கொண்டு, அந்த களத்திற்கு தேவையான இசையை கச்சிதமாகக் கொடுத்து இருக்கிறார். காட்சிகளில் இருக்கும் தொய்வினை பெரும்பாலும் போக்குவதும் ஈடு செய்வதும் சாம் சி.எஸ்-ன் பின்னணியிசை தான் என்றால் அது மிகையாகாது. பின்னணி இசை ஈர்த்த அளவிற்கு பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.

படத்தின் இயக்குநரான இசக்கி கார்வண்ணன் சிறந்த கதையை தேர்வு செய்திருக்கிறார். அதே போல் கதாபாத்திரத் தேர்வும் சிறப்பானதாக இருக்கிறது. திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமானதாக்கி,  காட்சிகளில் இன்னும் கொஞ்சம் வலு சேர்த்திருந்தால் தமிழ்க்குடிமகன் இன்னும் பெரிதான அளவில் மக்களை சென்று சேர்ந்திருக்கும்.  ஏனென்றால் கதையாகவும் கதைக்களமாகவும் இது தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் சென்று சேர வேண்டிய படம் என்பதே “தமிழ்க்குடிமகன்” திரைப்படத்திற்கான பெருமை.