Shadow

”மிஷன் சாப்டர் 1ல் ஆக்‌ஷன் காட்சிகள் வலிய திணிக்கப்பட்டவை அல்ல” – அருண் விஜய்

ஆக்‌ஷன் காட்சிகளை விரும்பும் ரசிகர்களுக்கு நடிகர் அருண் விஜய் எப்போதும் பிடித்தமானவர். ஏனெனில், அவர் தனது படங்களில் வித்தியாசமான ஸ்டண்ட் காட்சிகள் மூலம் ரசிகர்களைக் கவரக்கூடியவர். அவரது வரவிருக்கும் திரைப்படமான ‘மிஷன் சாப்டர் 1 (அச்சம் என்பது இல்லையே)’ டிரெய்லர் அவரது ஆக்‌ஷன் திறமையை வெளிப்படுத்தியுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் விஜய் இயக்கிய இந்தப் படம் ஜனவரி 12, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நடிகர் அருண் விஜய் படம் குறித்து கூறும்போது, ​​“எனது முந்தைய படங்களில் நான் செய்த ஆக்‌ஷன்களை விட இந்தப் படத்தில் ஆக்‌ஷன் இன்னும் அதிகமாக, சிறப்பாக இருக்கும். ‘மிஷன் சாப்டர் 1’ படத்தில் பல எமோஷன் உள்ளது. பல திருப்பங்களோடு பர்வையாளர்களுக்குப் பிடித்த வகையிலான திரையங்க அனுபவத்தை இந்தப் படம் கொடுத்து உற்சாகப்படுத்தும். இந்தப் படத்தில் பெயருக்காக நாங்கள் எந்த ஆக்‌ஷனையும் சேர்க்கவில்லை. திரைக்கதைக்கு தேவைப்பட்டதுதான் எல்லாம். குறிப்பாக, லண்டனில் ஓடும் பேருந்தில் ஒரு ஆக்‌ஷன் பிளாக் ஷாட் உள்ளது. அதில், எனது தசைநார் கிழிந்தது. நான் நிறைய ஸ்டண்ட்களைச் செய்ய வேண்டியிருந்தது. படத்தின் சிறப்பு என்னவென்றால், திரைக்கதை முன்னேற முன்னேற ஆக்‌ஷன் காட்சிகளும் பெரிதாக அதிரடியாக இருக்கும். ஆக்‌ஷனில் எனது சிறந்த திறனை வெளிக்கொண்டு வர இந்தப்படம் மூலம் ஒரு தளம் கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

இதயத்தைத் தூண்டும் காதல் கதைகள் மற்றும் உணர்ச்சிகரமான குடும்ப கதைகள் இயக்குவதில் பெயர் பெற்றவர் இயக்குநர் விஜய். நடிகர் அருண் விஜய் அதுகுறித்து பேசியதாவது, “நாங்கள் இருவரும் நிறைய கதைகளைப் பற்றி பேசியுள்ளோம். ஆரம்பத்தில், அவர் தனது பாணியில் ஒரு காதல் கதையை சொன்னார். ஒரு வாரம் கழித்து, உணர்ச்சிப்பூர்வமான பொழுதுபோக்குடன் கூடிய ஆக்‌ஷன் கதை சொல்லி என்னை ஆச்சரியப்படுத்தினார். திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களின் தற்போதைய மனநிலையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு படத்தில் ஒன்றாக வேலை செய்வோம் என்று அவர் என்னிடம் கூறினார். ‘மிஷன் சாப்டர் 1’ படத்தில் ஆக்‌ஷன், எமோஷன் மற்றும் செண்டிமெண்ட் ஆகியவை இருக்கும். குறிப்பாக, என் கதாபாத்திரத்திற்கும் மகள் இயலுக்கும் இடையே உள்ள உணர்வுபூர்வமான பிணைப்பு பார்வையாளர்களின் இதயங்களைத் தொடும்” என்றார்.

எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ் எஸ், ஜேசன் ஷா மற்றும் பலர் இந்தப் படத்தில் உள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்க, சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.