Shadow

”போர் என்கின்ற தலைப்பிற்குப் பொன்னியின் செல்வன் தான் காரணம்” – பிஜோய் நம்பியார்

சைத்தான், டேவிட், வாஷிர், ஷோலோ படங்களை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் நாயகர்களாக நடித்திருக்கும் திரைப்படம் “போர்”. டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம் தமிழ் ஹிந்தி என இரட்டை மொழிகளில் வரும் மார்ச் 1 முதல் வெளியாகவிருக்கிறது. “போர்” திரைப்படத்தை T Series மற்றும் Roox Media இணைந்து தயாரித்திருக்கின்றனர். இப்படத்தின் டிரைலர் வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், போன்றோர் கலந்து கொண்டனர். நிகழ்வில்

இயக்குநர் பிஜோய் நம்பியார் பேசியதாவது,

“போர்” திரைப்படம் ஒரு நேரிடையான தமிழ்ப்படம் எடுக்க வேண்டும் என்பதற்கான என்னுடைய மூன்றாவது முயற்சி ஆகும். ஷோலோ திரைப்படத்தையும் அந்த எண்ணத்தில் தான் உருவாக்கினேன். ஆனால் அதை தியேட்டர்களில் வெளியிட முடியாமல் போயிற்று. பந்த் போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் வந்து அதை தடை செய்துவிட்டது. ”போர்” திரைப்படம் ஒரு முழுமையான தமிழ்ப்படம். இதில் நடித்திருக்கும் முக்கிய நடிகர்கள் மற்றும் துணை நடிகர்கள் அனைவருமே தமிழ் தெரிந்தவர்கள். தமிழ் வெர்ஸனை மிகச் சிறப்பாக உருவாக்க எனக்கு ஸ்ரீகாந்த் உதவினார்.

இது ஒரு கலப்படமற்ற முழுத் தமிழ் திரைப்படம். கல்லூரி கால வாழ்க்கைத் தொடர்பானத் திரைப்படம். எனக்கு எப்போதுமே கல்லூரி தொடர்பான கதைகளை உருவாக்குவதில் ஆர்வம் உண்டு. இப்படம் முழுக்க முழுக்க குறிப்பாக கல்லூரி செல்லும் இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம். தமிழ்த் திரை உலகிற்குள் ஒரு தமிழ் திரைப்படத்தைக் கொண்டு நுழைய வேண்டும். தமிழ் பார்வையாளர்கள் என்னை ஒரு தமிழ் இயக்குநராகவே பார்க்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்படும் மூன்றாவது முயற்சி.

முதலில் இப்படத்தை மலையாளத்தில் எடுக்க வேண்டும் என்று தான் எண்ணினேன். பிறகு தமிழ் மற்றும் இந்தியில் எடுத்தால் சரியாக இருக்கும் என்று தோன்றியது. எனக்கு எப்போதும் தமிழ் வார்த்தைகளின் மீதும் அந்த ஒலி வடிவங்கள் மீதும், தமிழ் மொழியின் மீதும் ஒரு மயக்கம், காதல் உண்டு. இப்படத்தில் தமிழ் வடிவத்திற்கான வசனங்கள் மிகுந்த கவித்துவத்துவத்துடன் வந்திருப்பதாகத் தோன்றுகிறது. போர் திரைப்படத்திற்காக எனக்கு மிகுந்த ஒத்துழைப்பு நல்கிய நடிகர் நடிகைகள் அனைவருக்கும் நன்றி. ஏனென்றால் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் ஒரு படத்தை உருவாக்கும் போது நடிகர் நடிகைகளுக்கான சிக்கல்கள் அதிகம். அதைப் பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்த நடிகர் நடிகைகளுக்கும் எங்கள் தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றிகள்.

இரண்டு மொழிகளிலும் இப்படம் எடுக்கப்பட்டாலும் கதையில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டு மொழிகளிலும் ஒரே கதை தான். அர்ஜூன் தாஸை நான் தான் ஹிந்திக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்கின்ற தேவை இல்லை. அவர் ஏற்கனவே ஹிந்தி திரைப்படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். அர்ஜூன் தாஸுக்கு சண்டைக் காட்சியில் அடிபடும் போது நாங்கள் பாண்டிச்சேரியில் சூட்டிங்கில் இருந்தோம். அடிபட்டவுடன் சூட்டிங்கை நிறுத்திவிட்டு, சென்னை சென்றுவிடுவோம், ஒரு நாள் அவர் ஓய்வில் இருக்கட்டும், பின்னர் சூட்டிங்கை துவங்குவோம் என்று தான் முடிவு செய்தோம். ஆனால் அவர் என்னிடம் வந்து தனியாகப் பேசினார். சூட்டிங்கை நிறுத்தினால் தேவையில்லாத பண இழப்புகள் தோன்றும். எனக்கு ஒன்றும் பெரிய அடியில்லை; சூட்டிங்கை முடித்துவிட்டுத் தான் செல்கிறோம் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அவரது அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு என்னை பிரமிக்க வைக்கிறது.

போர் கல்லூரி தொடர்பான கதை என்றாலும் கூட ஏன் போர் என்கின்ற தலைப்பை தேர்வு செய்தோம் என்பது சுவாரஸ்யமானது. “பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, ஒரு போர்க்களக் காட்சியில் சண்டைக்காட்சி இயக்குநர் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக வந்த தெலுங்கு நடிகர் நடிகைகளிடம் மைக்கில் ‘இது போர், போர், போர்” அந்த முகபாவனையுடன் நில்லுங்கள், இது போர் போர்” என்று சத்தமாகக் கத்திக் கொண்டிருந்தார். எனக்கு அது மனதில் பதிந்துவிட்டது. உடனே என் நண்பரைக் கூப்பிட்டு அந்த டைட்டிலை பதிவு செய்யச் சொன்னேன். இரண்டு எதிர் எதிர் கதாபாத்திரத்தின் யுத்தத்திற்கு போர் என்கின்ற தலைப்பு சரியாக இருக்கும் என்று தோன்றியது என்றார்.