
பழங்கால காதல் கதை, பழங்கால பேய்க்கதை இரண்டும் சேர்ந்தால் அதுதான் தூக்குதுரை திரைப்படத்தின் கதை.
இனியாவின் குடும்பம் திருவிழாக்களில் ஊரின் முதல் மரியாதையைப் பெறும் ஜமீன்தார் குடும்பம். திருவிழாக்களில் புரொஜெக்டர் மூலம் படம் ஓட்டிக் காட்டும் யோகிபாபுவிற்கும் இனியாவிற்கும் காதல் மலர்கிறது. தங்கள் காதலைக் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு ஊரைவிட்டு ஓட முயற்சி செய்கிறார்கள். ஊர் மக்களிடம் மாட்டிக் கொள்ளும் அவர்களில் யோகிபாபுவை இனியா குடும்பம் ஊர் மக்களோடு சேர்ந்து ஒரு கிணற்றில் வைத்து எரித்துக் கொன்றுவிடுகிறார்கள். அந்த கிணற்றுக்குள் ஜமீன் குடும்பத்திற்குச் சொந்தமான ஒரு விலைமதிப்புமிக்க கிரீடம் மாட்டிக் கொள்கிறது. அதை எடுக்க வருபவர்களை யோகிபாபு பேயாக வந்து மிரட்டுகிறார். அதை மீறி கிரீடத்தை கைப்பற்றினார்களா இல்லையா என்பது மீதிக்கதை.
யோகிபாபு இருந்தாலே போதும், படம் ஓடிவிடும் என்கின்ற நம்பிக்கையில் எடுக்கப்பட்டிருக்கும் மற்றொரு படம். கதை அதரபழசு என்றால், காட்சிகள் அதைவிட அரதப்பழசாக இருக்கின்றன. யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், பாலசரவணன், செண்ட்ராயன் , இனியா, மாரிமுத்து, மகேஷ், நமோ நாராயணன், அஸ்வின், சத்யா, சீனியம்மா, வினோத், தங்கராஜு, சிந்தலப்பட்டி சுகி, ராஜா வெற்றிபிரபு என்று பலர் நடித்திருக்கிறார்கள்.
ஏகப்பட்ட நகைச்சுவை நடிகர்கள் படத்தில் இருந்தாலும், படத்தில் நகைச்சுவை என்பது மருந்திற்குக் கூட இல்லை. நகைச்சுவை என்று நினைத்துக் கொண்டு பாலசரவணன், செண்ட்ராயன், மொட்டை ராஜேந்திரன் கூட்டணி நம்மை அநியாயத்திற்கு சோதிக்கிறார்கள். ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மெசெஜ்களை எல்லாம் எடுத்துக் கொண்டு காமெடி என்று ஒப்பேற்றப் பார்க்கிறார்கள்.
படம் காமெடிப் படமா இல்லை த்ரில்லர் படமா என்கின்ற குழப்பம் நமக்கு மட்டும் இல்லை. இயக்குநருக்கும் இருந்திருக்கும் போல் தெரிகிறது. டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியிருக்கிறார். கே.எஸ்.மனோஜின் இசை தனியாக தள்ளாடுகிறது. ரவிவர்மாவின் ஒளிப்பதிவு ஒரு அறைக்குள்ளயே சுற்றிச் சுற்றி வந்து அலுப்பூட்டுகிறது.
– இன்பராஜா ராஜலிங்கம்