Shadow

துடிக்கும் கரங்கள் – விமர்சனம்

போதைப் பொருள் தடுப்புப்  பிரிவு ஐஜியின் மகள் மர்மமான முறையில் பூட்டிய காருக்குள் சடலமாக மீட்கப்படுகிறார்.  அதே நேரம் தன் மகனைத் தேடி சென்னைக்கு வரும் வயதான முஸ்லீம் பெரியவர்(சங்கிலி முருகன்), மகனின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருக்க, அவன் இருக்கும் இடம் தெரியாமல் தெருத் தெருவாக அலைகிறார். ‘கொத்து பரோட்டோ” என்கின்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தும் விமலும், சதீஷும் அந்த முஸ்லீம் பெரியவருக்கு உதவ எண்ணி அப்பெரியவரின் மகன் காணாமல் போனது தொடர்பான தகவலை வீடியோவாக வெளியிட்டு உதவி கேட்கின்றனர்.  இதைத் தொடர்ந்து இறந்து போன ஐ.ஜியின் மகளுக்கும் காணாமல் போன முஸ்லீம் பெரியவரின் மகனுக்கும் என்ன தொடர்பு..? அவர்கள் என்ன ஆனார்கள் என்கின்ற கேள்விக்கான விடை தேடும் முயற்சியே “துடிக்கும் கரங்கள்”.

முதன்முறையாக ஆக்‌ஷன் ஹீரோவாக விமல் முயற்சித்திருக்கும் படம், முதல் சண்டைக் காட்சியில் ரவுண்டு கட்டி நிற்கும் ரவுடிகளை எப்படி விமல் ஆக்‌ஷன் ஹீரோவாக சமாளிக்கப் போகிறார் என்று நாம் பார்த்துக் கொண்டு இருக்க,  தன்னைச் சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டு, முகத்தில் துணியை எடுத்து கட்டிக் கொண்டு,  “எனக்கு கொரோனா இருக்கு, இப்ப வாங்கடா என் பக்கத்துல..” என்று சொன்னதும் ரவுடிகள் நாற்புறமும் சிதறி ஓடுவார்கள்.  நாமும் அந்த இடத்திலேயே ஓடி இருக்க வேண்டும். ஏனென்றால் அந்தக் காட்சியிலேயே இது எவ்வளவு பழைய படம், எவ்வளவு வருடத்திற்கு முன்னாள் வர வேண்டிய படம் என்பதை சூசகமாக சொல்லி இருந்தார்கள்.  நாம் தான் சூதனமாக இருக்கத் தவறிவிட்டோம்.

காணாமல் போன முஸ்லீம் பெரியவரின் மகன் குறித்து போலீஸில் புகார் தெரிவிக்கப்படுகிறது.  போலீஸ் தேடுகிறதோ இல்லையோ நாயகன் அந்தப் பெரியவரின் மகனைத் தேடி அலைகிறார்.  மீதி நேரங்களில் ஹீரோயின் மிஷா நரங் பின்னால் அலைகிறார்.  ஒரு கட்டத்தில் ஹீரோவின் நல்ல மனது ஹீரோயினுக்கு தெரிந்துவிட, வழக்கம் போல் இருவரும் டூயட் எல்லாம் பாடுகிறார்கள்.  இன்னொரு பக்கம் ஐஜி மகள் மரணத்தை ரகசியமாக விசாரிக்க செளந்தரராஜன் நியமிக்கப்படுகிறார்.  ஐஜி மகளுக்கு ஹெலன் என்னும் நெருக்கமான தோழி இருக்கிறார் என்று தெரிந்து அவளைப் பார்க்க செளந்தர்ராஜன் மற்றும் விமல் இருவரும் தனித்தனியே செல்கிறார்கள்.  ஹெலன் இரண்டு வாரங்கள் கோவாவில் நடக்கும் கேம்ப் ஒன்றிற்கு சென்றிருக்கும் தகவல் கிடைத்ததும், யூடியூப் சேனல் நடத்தும் விமல் காத்திருக்க, போலீஸ் அதிகாரியான செளதர்ராஜனும் அவர் பொறுமையாக வரட்டும் என்று ஹெலன் வரும் வரை காத்திருக்கிறார். நாமும் அவரோடு சேர்ந்து காத்திருக்கிறோம்.

நாயகனின் தங்கை என்று சொல்லிக் கொண்டு ஒரு கதாபாத்திரத்தை காட்டுகிறார்கள். ஆனால் அவர் திருமணம் ஆன பெண் போல்  உச்சந்தலையில் வைத்த பொட்டினைக் கூட அழிக்காமல் வந்து நடித்துக் கொடுத்திருக்கிறார்.  படக்குழுவினர் இதை மட்டுமா கவனிக்கவில்லை, நாயகன் தன் தங்கைக்காக  ஒரு டிராபிக் இன்ஸ்பெக்டரை ஊரே பார்க்க பொளந்து கட்டினாரே..? அதை எல்லோரும்  வீடியோ வேறு எடுத்தார்களே..? இதனால் நாயகன் மீது வழக்கு பதியப்படுமே என்பதையும் கவனிக்கவில்லை,  அந்த இன்ஸ்பெக்டர்  இறந்து கிடக்கும் போது நாயகன் மீது சந்தேகம் வர வேண்டுமே என்பதைய்ம் கவனிக்கவில்லை.  கழுத்தில் நீண்ட வெட்டுக்காயம் பட்டவர்த்தனமாக நம் கண்களுக்கு தெரிய, விபத்தில் தான் இறந்திருக்கிறார் என்று அவர்களுக்குள்ளேயே பேசிக் கொள்கிறார்கள்.

இதற்கிடையில் இவர் தான் முக்கிய வில்லன் என்று வாலண்டியராக அவர்களாகவே வில்லனை அறிமுகப்படுத்துகிறார்கள். நாமும் ஓ, அப்படியா என்று கேட்டுக் கொள்கிறோம். பின்னர் நாயகனைக் கொல்லும் முயற்சியில் நாயகி தாக்கப்படுகிறார்.  ஹெலன் மூலம் ஒரு ஆதாரமும் கிடைக்கிறது.  படம் க்ளைமாக்ஸ் காட்சியை நெருங்கிவிட்டதே, போலீஸான நாம் ஏதாவது செய்ய வேண்டுமே என்று முதன் முறை புத்திசாலித்தனமாக யோசிக்கும் செளந்தரராஜன் ஐஜி மகள்,  காணாமல் போன முஸ்லீம் பெரியவரின் மகன் இருவரின் செல்போன் சிக்னலை ஆராய்கிறார்.

அவை கடைசியாக ஆக்டிவ்-ஆக இருந்த இடத்திற்கு ஒரு வழியாக வந்து சேர, அதற்குள் நாயகன் எல்லோரையும் கொன்று நீதியை நிலைநாட்டுகிறார்.

ஒளிப்பதிவாளர் ரம்மி,  படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர்,  இசையமைப்பாளர்  ராகவ் பிரசாத் என அனைவருமே மிகச் சுமாரான உழைப்பையே கொடுத்திருக்கிறார்கள்.  ஏனென்றால் இயக்குநர் வேலுதாஸ் இவர்களிடம் அதீதமான உழைப்பை வாங்கக்கூடாது என்று ஆரம்பத்திலேயே முடிவு செய்துவிட்டார் போலத் தெரிகிறது. கலை இயக்குநர் கண்ணனின் உழைப்பு மட்டும் அபாரமாகத் தனித்து தெரிகிறது.

ஏதோ நாயகன் யூடியூப் நடத்துபவர்,  தற்கால துரித உணவு கலாச்சாரத்தால் என்னென்ன பிரச்சனைகள் வருகிறது என்பதை எல்லாம் இப்படத்தில் நாயகன் புட்டு புட்டு  வைக்கிறார் என்று கூறியிருந்தார்கள். அப்படி எதுவும் இருந்தார் போல் தெரியவில்லை.

படத்தில் பெரிய அளவில் மட்டன் பிரியாணி செய்யும் காட்சி வரும்.  அதில் வெந்து போன அந்த மட்டன் துண்டுகளை எடுத்து அதை மசித்து ஒருவர் ருசி பார்ப்பார். ஆகா அதி அற்புதமான காட்சி,  அக்காட்சியை காணும் போதே “துடிக்கும் நாவுகள்”-யை அடக்க முடியவில்லை.  ஒரே அதி அற்புதமான காட்சி அது.