Search

வீரையன் விமர்சனம்

Veeraiyan movie review

வீரையன் என்பவர் தஞ்சாவூர் மாவட்டத்தின் காவல் தெய்வங்களில் ஒருவர். சிறு தெய்வங்கள், குறிப்பாகத் தமிழகத்தின் காவல் தெய்வங்கள் எல்லாம் மனிதர்களாக வாழ்ந்து தனது தியாகத்தாலோ, வீரத்தாலோ அந்தப் பகுதி மக்களின் அன்பையும் மரியாதையுக் சம்பாதித்திருப்பார்கள். அப்படி, தொழில்நுட்பத் தொடர்பு சாதனங்கள் புகுந்து மக்களின் அன்றாட வாழ்வைப் பாதித்திராத1989 ஆம் ஆண்டில், தஞ்சாவூரில் வாழ்ந்த மிகச் சாதாரண மனிதன் எப்படித் தன் தியாகத்தால் வீரையன் ஆகிறான் என்பதுதான் படத்தின் கதை.

படத்தில் மூன்று கதைகள் ஒன்றோடு ஒன்று பிணைந்து வருகின்றன. இந்தப் படத்தில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் நல்லவர்கள். சூழ்நிலைகள் பாதகமாய் அமைகிறது. வீரையனாக ‘ஆடுகளம்’ நரேன் நடித்துள்ளார். பொறுப்பான நல்ல தந்தை கதாபாத்திரத்திற்கு ஏற்றவர் என முடிசூட்டிக்கொண்டிருக்கும் ஜெயப்ரகாஷ்க்கு மிகச் சிறந்த போட்டியாகப் பரிணமித்து வருகிறார். படத்தின் தலைப்பைக் கொண்டு, கதை இவரைச் சுற்றித்தான் நடக்கிறது எனக் கருத வேண்டும். வீரையன் என்பது உவமைக்காகக் கையாளப்பட்டுள்ள தலைப்பு மட்டுமே!

ஆடுகளம் நரேனுக்கு தன் மகன் மிக நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டுமென ஆசை; தன் தந்தையின் ஆசையை நிறைவேற்ற நினைக்கும் நன்மகன் ‘ஆரண்ய காண்டம்’ வசந்த்; யூகித் எனும் தன் வீட்டு கார் ட்ரைவரைக் காதலிக்கிறார் கவுன்சிலர் வேலா ராமமூர்த்தியின் மகள் ஹேமா; ஹேமாவைக் காதலிக்கும் யூகித்-க்கும், பொறுப்பில்லாமல் சில்லறைத் திருடுகள் செய்து வரும் இனிகோ பிரபாகருக்கும் எப்பவும் ஒத்து வருவதில்லை. இனிகோ பிரபாகரின் குறுக்கீட்டால், வசந்தின் படிப்பும் ஹேமாவின் காதலும் கேள்விக்குறியாகிறது. பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.

இனிகோ பிரபாகரும், கயல் வின்சென்ட்டும், திருநங்கையாக நடித்திருக்கும் தியேட்டர் ஆர்டிஸ்ட் பிரீத்திஷாவும் யாருமற்ற நண்பர்கள். அவர்கள் செய்யும் ரகளை ரசிக்க வைக்கின்றன என்றாலும், போதுமான அளவு அழுத்தம் இல்லாதது மிகப் பெரும் குறையாக உள்ளது. ஆனால், நரேனின் கதாபாத்திரத்திற்கு அத்தகைய வலுவான சித்தரிப்பைக் கொடுத்துள்ளார். மனிதர் தன் நடிப்பால் அதை இன்னும் சிறப்பாக்கியுள்ளார். படத்தின் தொடக்கமே நரேனில் இருந்து தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இனிகோ பிரபாகருக்கும் ஷைனிக்குமான காதல் காட்சிகள் ரசிக்க வைக்கிறன. ஆனால், பள்ளி மாணவியாக வரும் ஹேமா மிக நன்றாக நடித்துள்ளார். திருநங்கையாக நடித்திருக்கும் பிரத்தீஷாவும் கலக்கியுள்ளார். ஹலோ கந்தசாமி, கயல் வின்சென்ட் போன்றவர்களும் தன் பங்கை நன்றாகச் செய்துள்ளனர். ஆனால், இவர்களின் அறிமுகமும், அதன் பின்னான காட்சிகளிலும் அழுத்தம் இல்லாதது மிகப் பெரும் குறை. விளையாட்டாக முதல் பாதியைக் கடத்த மட்டுமே உதவியுள்ளது.

கதை திரைக்கதை வசனம் எழுதி, இயக்கித் தயாரித்துள்ளார் பரீத். காவல் தெய்வத்தைக் குறியீடாகத் தலைப்பில் பயன்படுத்தியுள்ள பரீத், இறந்தவரின் ஆவியை அழைத்துக் கேள்விகள் கேட்கும் விதமாகவும் கிராமத்து நம்பிக்கையைக் காட்சியாக அமைத்துள்ளார். ஆனாலும், கோர்வையின்மையும் வலுவாக உணர்வுகளைக் கடத்தத் தவறியதாலும் படத்தில் ஆங்காங்கே அசுவாரசியம் எட்டிப் பார்த்தவண்ணம் உள்ளது.