Shadow

விஜயானந்த் விமர்சனம்

கன்னடத் திரையுலகின் முதல் சுயசரிதை படம் (பயோபிக்). ஒரு லாரியை 5036 லாரிகளாக மாற்றிய ஒரு பெரும் தொழிலதிபரின் வெற்றிப் பயணமே இப்படம். வெற்றியும் மகிழ்ச்சியும், கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து உழைப்போருக்கு எப்படியும் சாத்தியப்பட்டுவிடும் என நம்பிக்கையை விதைக்கிறது தொழிலதிபர் விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை.

ஓர் அடி எடுத்து வைக்க நினைத்தால் ஐந்து அடி பின்னால் தள்ளக் காத்திருக்கும் வியாபார உலகில், குடும்பத் தொழில் விட்டுவிட்டு புதிய தொழிலில் காலில் வைக்கும் விஜய் சங்கேஷ்வரின் அதீத்த்தை வியக்காமல் இருக்க முடியவில்லை. அது அத்தனை சுலபமல்ல எனத் தெரிந்தும், எது அவரை விடாப்பிடியாக அத்தொழிலில் கட்டிப் போட்டது என்பதற்கான அழுத்தமான பதில் இல்லாதது குறை. மிகப் பிரயத்தனப்பட்டுக் கிடைக்கும் முதல் சவாரியில், லாரியின் ஒரு பின்சக்கரம் பாளம் பாளமாக வெடித்துப் பழுதாகிவிடுகிறது. அந்த முதல் சவாலை அவர் எப்படிச் சமாளித்தார் என்பதைச் சொல்லாமல், கதையைச் சுவாரசிப்படுத்தத் தவறியுள்ளார் இயக்குநர் ரிஷிகா ஷர்மா.

பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பாங்கு, விஜய் சங்கேஷ்வரரின் தனித்திறமை என எதையும் முன்னிலைப்படுத்தாமல், சமுத்திரத்தையே சல்லிக்கும் நபர் என கணேசன் அண்ணாச்சியின் வசனத்தைக் கொண்டு முதற்பாதியில் அவரது வல்லமைக்குக் கட்டியம் கூறுவதோடு முடித்துவிடுகின்றனர். இரண்டாம் பாதியில், அவர் பாஜகவின் முதல் எம்.பி.யான பிறகு, பத்திரிகையாளர் பிரகாஷ் பெலவாடியின் எதிரியாகிறார். இருவருக்கும் எங்கே புகைச்சல் தொடங்குகிறது என்பது கதையில் சொல்லப்படவில்லை. ஆனால், பிரகாஷ் பெலவாடி தரும் நெருக்கடிகளைத் தனது மகன் ஆனந்த் சங்கேஷ்வரோடு இணைந்து சமாளிப்பது அட்டகாசம்.

சுவாரசியத்திற்கான கண்ணிகளைக் கோர்ப்பதில் ரிஷிகா ஷர்மா தவறியிருந்தாலும், படத்தின் தொழில்நுட்ப நேர்த்தியின் மூலம் அசரடிக்கிறார். ஐந்து தசாப்தங்களைத் தொட்டுச் செல்கிறது படம். விஜய் சங்கேஷ்வரின் தந்தை BG சங்கேஷ்வராக நடித்திருக்கும் ஆனந்த் நாக், ராதாரவியின் டப்பிங் குரலையும் மீறி, அந்தப் பாத்திரத்தில் அற்புதமானதொரு மேஜிக்கைச் செய்துள்ளார். அது போல், பிரகாஷ் பெலவாடியும் தனது நடிப்பால் ரசிக்க வைக்கிறார். ஒரு ரூபாய்க்கு தொடங்கப்படும் பத்திரிகையை விற்க வேண்டிய நெருக்கடி ஏன் உருவானது என்று சொல்லாமல் கடந்துவிடுகின்றனர். அப்படிச் சொல்லப்படாமல் நிறைய சம்பவங்களை ‘ஜம்ப்’ செய்ததால் ஒரு நிறைவின்மையைத் தருகிறது.

நாயகன் விஜய் சங்கேஷ்வராக நடித்துள்ள நிஹாலின் நடிப்பும், விஜயின் மகன் ஆனந்த் சங்கேஸ்வராக நடித்துள்ள பரத் போபன்னாவின் நடிப்பும் ரசிக்கும்படி உள்ளது. கீர்த்தன் பூஜாரியின் ஒளிப்பதிவும், கலை இயக்குமும், ரிஷிகா ஷர்மாவின் ஆடை வடிவமைப்பும், ஹேமந்த் குமாரின் நேர்த்தியான படத்தொகுப்பில் ரசிக்கும்படி உள்ளன. மிகையற்ற காட்சிகளால், நிதானமாக நகரும் ஒரு சிற்றோடை போல் இச்சுயசரிதப் படத்தை உருவாக்கியுள்ளனர்.