ஒரு பிரச்சனையின் அந்தத்தை படத்தின் முதற்பாதியிலும், அதன் ஆதியை படத்தின் இரண்டாம் பாதியிலும் சொல்லியுள்ளனர்.
டாக்டர் கரண் உதகமண்டலத்திற்கு ஒரு மெடிக்கல் ரிசர்ச் ஃபெளண்டேஷனில் பணியில் சேர வருகிறார். அவர் தங்கும் அறையில், தினம் இரவு 1 மணிக்கு ஒரு பெண்ணின் உருவம் வந்து அவரை அலைகழிக்கிறது. யார் அந்தப் பெண், ஏன் எதற்காக அலைக்கழிக்கிறாள் என்பதுதான் படத்தின் கதை.
இடைவேளை வரையிலான படம் விறுவிறுப்பாகவும் திகிலாகவும் போகிறது. L.V.கணேசனின் பின்னணி இசையும் D.S.வாசனின் ஒளிப்பதிவும் படத்தின் மிகப் பெரிய பலம். முக்கியமாக சுவாசத்தை பின்னணி இசையாக உபயோகித்திருப்பதைச் சொல்லலாம். அதற்கான காரணம் இரண்டாம் பாதியில் தெரிய வருகிறது.
ஹிந்தி உச்சரிப்பு தொனியில் வசனம் பேசும் பழக்கத்திலிருந்து அஜய் எனும் கெளரவ் கபூர் முழுவதுமாக மாறவில்லை. ‘தேங்க்ஸ்’ என்ற ஒற்றைச் சொல் வசனம் என்றாலும் நன்றாக அழுத்திச் சொல்கிறார். டாக்டர் கரண் பாத்திரம் இவருக்கு நன்றாகவே பொருந்துகிறது. திரைக்கதையின் பலவீனத்தால் மிட்டல் அகர்வாலுடனான காதல் காட்சிகள் ஈர்க்கவில்லை.
கெளஷிக்கின் முதல் படமிது என சொல்லவே முடியாது. கதாபாத்திரத் தேர்வு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய விதம், படத்தின் முதற்பாதி திரைக்கதை, படத்தின் எதிர்பாராத முடிவு என இயக்குநராக கெளசிக் கலக்கியுள்ளார்.