இது தமிழ் ⚡ AMP

எடையை ஏற்றி இறக்கும் அபூர்வ நடிகை

By Dinesh R | Mar 22, 2014

கிரிக்கெட் நமது நாட்டில் மதத்தை போல் இன்றியமையாதது என்று கூறப்படுகிறது. அத்தகைய கிரிக்கெட் விளையாட்டை தமிழ் நாட்டுக்காக விளையாடிய லக்ஷ்மி ப்ரியா சந்திர மௌலி இப்போது ‘கள்ளப்படம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மனிதவள மேம்பாட்டுத் துறையில் மேற்படிப்பு முடித்த, தமிழ் பேசும் சென்னைவாசியான லக்ஷ்மி ப்ரியா ஆர்வத்தின் பேரில் தியேட்டர் பிளேஸ் (theatre plays) நடித்தும் வருகிறார். சமீபத்தில் ‘கள்ளப்படம்’ படப்பிடிப்பின் போது இயக்குநர் வடிவேல் ஒரு சில காட்சிகளுக்காக லக்ஷ்மி ப்ரியாவை ஒரு சில கிலோ எடை கூட வேண்டும் எனக் கூறினார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

“அவ்வளவுதானே சார்? அப்படியே ஆகட்டும்” என்று கூறிச் சென்றார். அளவில்லாமல் சாப்பிட்ட இனிப்புகளின் உதவியால் எடையைக் கூட்டவும் செய்தார். காட்சியைப் படமாக்கிய பிறகு, இயக்குநர் மீண்டும் எடையைக் குறைக்கச் சொன்னார். தன்னுடைய சீரிய முயற்சியாலும் கடினமான உடல் உழைப்பாலும் லக்ஷ்மி ப்ரியா எடையைக் குறைக்கவும் செய்தார். பொதுவாக கதாநாயகர்கள் மட்டுமே மெனக்கெடும் இத்தகைய விசேஷ உழைப்பை லக்ஷ்மி ப்ரியா செய்தது மிகவும் பெருமைக்குரியது .

இதைப் பற்றி லக்ஷ்மி ப்ரியா கூறும் போது, “என்னுடைய கதாபாத்திரம் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்க பெற்ற, சக்தி வாய்ந்த கதாபாத்திரம் ஆகும். இத்தகைய குணாதிசயங்கள் பொதுவாகவே நாயகர்களுக்கு மட்டுமே அமையப் பெறும் . என் திரை உலகப் பயணத்தின் துவக்கத்திலேயே, என்னுடைய அபிமான நடிகை நந்திதா தாஸ் ஏற்ற கதாபாத்திரம் போலவே எனக்கும் கிடைத்தது என் பாக்கியமே. சிறந்த நடிகையாகப் பெயர் வாங்க வேண்டும் என்பதுதான் என் ஆசையே தவிர , நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்பதல்ல” என்று கூறினார்.