இது தமிழ் ⚡ AMP

காதலில் சொதப்புவது எப்படி விமர்சனம்

By admin | Feb 21, 2012

காதலில் சொதப்புவது எப்படி – இளமை துள்ளும் குதூகலமான படம். காதலில் சொதப்புவது எப்படி என்ற தனது குறும்படத்தை அப்படியே விரிவாக்கி திரைப்படமாக்கி விட்டார் இயக்குனர் பாலாஜி மோகன். நாளைய இயக்குனர் என்ற நம்பிக்கையை தற்போது இயக்குனர் ஆகி மெய்ப்பித்து விட்டார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அருண் வீட்டிற்கு ஒரே பிள்ளை. மிகவும் செல்லமாய் வளர்க்கப்பட்டாலும் பொறுப்பான கல்லூரி மாணவன். வேறு துறை மாணவியான பார்வதி மேல் அருணிற்கு காதல் மலர்கிறது. சின்ன புரிதலின்மையால் பிரியும் அவர்கள் மீண்டும் இணைகிறார்களா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.

சொதப்பும் முக பாவம் சித்தார்த்திற்கு இயல்பாகவே வருகிறது. படம் முழுவதும் அவர் முகம், ‘ஏன் இப்படி நடக்கிறது?’ என்று கேள்வியை சுமந்தவாறே உள்ளது. சித்தார்த்தைத் தவிர்த்து வேறு எவரேனும் இப்பாத்திரத்திற்குப் பொருந்தி இருப்பார்களா என்பது ஐயம் தான். அதை சித்தார்த்தும் நன்றாக உணர்ந்ததால் தான் படத்தின் இணை தயாரிப்பாளராகவும் உள்ளார் போலும். படத்தின் இன்னொரு இணை தயரிப்பாளர் ஆக ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் இளமை துள்ள இவரின் ஒளிப்பதிவும் ஒரு காரணம்.

நாயகியாக மைனா அமலா பால். வேட்டை,  முப்பொழுதும் உன் கற்பனைகள் என அசத்தலாய் இந்த வருடம் இவருக்கு தொடங்கி உள்ளது. அவரது பெரிய கண்களில் இருந்து கண்ணீர் வருவதை அருவியோடு ஒப்பிட்டிருக்கும் இயக்குனரின் சமார்த்தியம் ரசனைக்குரியது. தாய் தந்தையரின் பிரிவை எண்ணி முகம் வாடுவது, காதலன் மேல் அகல கண்களைத் திறந்து கோபப்பட்டு கத்துவது என அமலா பால் பார்வதி என்னும் பாத்திரமாகவே உள்ளார்.

அருணின் நண்பர்களாக நடித்திருக்கும் சிவாவும், விக்னேஷும் படத்தின் கலகலப்பிற்கு உதவுகின்றனர். குறிப்பாக சிவாவின் அறிமுகத்திற்குப் பிறகு மீண்டும் அவர் தோன்றும் காட்சிகளில் எல்லாம் திரையரங்கில் ஆரவாரம் எழுகிறது. இவர்கள் இருவரும் குறும்படத்தில் நடித்த அதே வேடத்தில் அப்படியே தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நகைச்சுவை என்னும் பெயரில் கழுத்தறுக்கும் நகைச்சுவை நடிகர்களிடம் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள நல்லதொரு படம்.

நாயகி, நாயகன் இடையே தோன்றும் தன்முனைப்பை மையப்படுத்தி ஏற்கனவே பல படங்கள் வந்திருந்தாலும் இப்படம் தனித்து தெரிகிறது. படம் தொடங்கியது முதல் எத்தகைய மன உளைச்சலையும் அளிக்காமல்.. அப்படியே முடிந்தும் விடுகிறது. மற்ற படங்கள் போல் பெண்களை காதலில் இரக்கம் அற்றவர்களாகவும், பிடிவாத குணம் மிகுந்தவர்களாகவும் சித்தரிக்காதது ஆறுதலான சங்கதி. ஜான் ஆக நடிக்கும் ஷ்யாம் மற்றும் கேத்தி ஆக நடிக்கும் பூஜா இணையும் கலக்குகின்றனர். இயக்குனர் பாலாஜி மோகன் கதாபாத்திர தேர்வுகளை கனகச்சிதமாக செய்துள்ளார். உதாரணத்திற்கு சித்தார்த்தின் பெற்றோராக வரும் ரவி ராகவேந்திரா, ஸ்ரீ ரஞ்சினி இணை மற்றும் அமலா பாலின் பெற்றோராக வரும் சுரேஷ், சுரேகா இணை. தன் முன்னாள் காதலி திருமணம் செய்யவிருக்கும் நபரை வஞ்சகமாக குடிக்க வைத்து குழப்பி விடுபவராக வரும் பாலாஜி என படத்தில் வரும் அனைத்து பாத்திரங்களும் நிறைவாக நடித்துள்ளனர். பாடல்களில் சோபிக்க தவறிய தமன் பின்னணி இசையில் சமன் செய்துள்ளார். குறும்படத்தினைப் போலவே கடைசிக் காட்சிகளில் தோன்றி தனது முகத்தையும் பதித்துக் கொண்டுள்ளார் இயக்குனர்.

காதலில் சொதப்புவது எப்படி உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பது போல் சொதப்பலில்லாத காதலும் பாழ்.