இது தமிழ் ⚡ AMP

கெத்து விமர்சனம்

By Dinesh R | Jan 15, 2016

கொலை வழக்கில் சிக்கிக் கொண்ட துளசி ராமனை அவரது மகன் சேது எப்படி மீட்கிறான் என்பது தான் படத்தின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சேதுவாக உதயநிதி ஸ்டாலின். நகைச்சுவைப் படத்திலிருந்து அடுத்த கட்ட சோதனையை அழகாகச் செய்து பார்த்துள்ளார். சந்தானம் இன்றி வரும் உதயநிதியின் முதல் படம் என்ற விசேஷப் பெருமை இப்படத்திற்கு உண்டு. கதையின் நாயகனாக இருப்பதால், உதயநிதியின் முந்தைய கதாபாத்திரங்களை விட நூலகத்தில் பணி புரியும் சேது கொஞ்சமாக ஈர்க்கவே செய்கிறார்.

புத்தகத் திருடியாக வருகிறார் எமி ஜாக்சன். அதிலும் அவர் திருடும் புத்தகங்கள் எல்லாம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வண்ணமுள்ளன. உதாரணத்திற்கு, ஜெயமோகன் எழுதிய வெள்ளையானை நாவலைத் திருடி ஆச்சரியம் ஏற்படுத்துகிறார். இப்படியொரு நாயகியை தமிழ்த் திரையில் உலவ விட்ட இயக்குநர் திருக்குமரனை எண்ணி வியக்காமல் இருக்கவே முடியவில்லை.

‘சாவி.. சாவி..’ என சின்னச் சின்ன வசனங்களிலும் தன் முத்திரையைப் பதிக்கும் அனுபவஸ்தராக சத்யராஜ், துளசி ராமன் எனும் விளையாட்டு ஆசிரியராக நடித்துள்ளார். அவரது மகளாக நடித்திருக்கும் பெண்ணும் கவனத்தை ஈர்க்கிறார். குறிப்பாக, தடைகளைத் தாண்டி அவர் ஓடி பயிற்சி எடுக்கும் காட்சிகள்.

M.சுகுமாரின் ஒளிப்பதிவில் கெத்து செம ஸ்டைலான படமாக மிளிர்கிறது. ஸ்னைப்பராக வரும் விக்ராந்த், அந்தக் கதாபாத்திரத்துக்குச் சரியான தேர்வு. ராக்கெட் விஞ்ஞானி அப்துல் கமாலைக் கொல்ல விக்ராந்த் வகுக்கும் வியூகம் ரசிக்க வைக்கிறது. ‘வொயின் ஷாப்’ ஓனராக வரும் மைம் கோபியும், அவரது கவுண்சிலர் அண்ணனும் கூடக் கச்சிதமாகப் பொருந்துகின்றனர்.

மான் கராத்தே படத்துக்கும், இந்தப் படத்துக்கும் தான் எவ்வளவோ வேறுபாடு? இயக்குநர் திருக்குமரன் அழகான த்ரில்லர் ஒன்றைக் கொடுத்துள்ளார்.