“நான் டேஞ்சர் டயபாலிக்டா.. இரும்புத்தூணுடா” என ‘சரவணா (2006)’ படத்தில் விவேக் சொல்வார். டயபாலிக் என்பது சாத்தானின் குணாதிசயத்தைக் குறிக்கும் சொல். தன்னை டெரராகக் காட்டிக் கொள்ள விவேக் உபயோகிக்கும் வார்த்தை என நினைத்திருந்தேன்.
ஆனால் அவர் ஒரு சூப்பர் ஹீரோ. 1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே, லயன் காமிக்ஸ் இத்தாலிய நாயகனான டேஞ்சர் டயபாலிக்கை தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளனர். பின் 26 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் டேஞ்சர் டயபாலிக்கை 2013இல் களமிறக்கியுள்ளனர். அதுவும் ஜுன், டிசம்பர் என இருமுறை வந்துவிட்டார்.
டயபாலிக்கின் பூர்விகம் இத்தாலி. அங்கே டயபாலிக் காமிக்ஸ்கள் சுமார் 40 லட்சம் பிரதிகள் விற்கின்றனவாம். இத்தாலியைவிட அதிக மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் அத்தகைய விற்பனை சாத்தியமாக கிழக்கில் சூரியன் அஸ்தமித்தால்தானாச்சு.
ஏஞ்சலா ஜிஸானி என்ற பெண்தான் டயபாலிக் கதாபாத்திரத்தை நவம்பர் 1962 இல் உருவாக்கியவர். பெண்கள் காரோட்டியதை ஆச்சரியமாகப் பார்க்கப்பட்ட 1950களிலேயே விமானம் ஓட்டுவதற்கான உரிமையை வைத்திருந்தவர் ஏஞ்சலா. தனி பதிப்பகம் ஒன்றினைத் தொடங்கி, தங்கை லூசியானா ஜிஸானியையும் இணைத்துக் கொண்டு டயபாலிக்கை சூப்பர் ஹீரோவாக்கி விட்டார் ஏஞ்சலா. காமிக்ஸ் உலகின் தவிர்க்க இயலாத சகாப்தங்கள் இவ்விரு சகோதரிகளும். ஏஞ்சலா இறந்த 10 மாதங்களுக்குப் பிறகுதான் தமிழகத்தில் டயபாலிக் அறிமுகமாகியுள்ளார்.
‘குற்றத் திருவிழா’ என்ற தலைப்பிற்கு ஏற்றவாறு கோலாகலமான குற்றங்களை எதையும் டயபாலிக் செய்துவிடவில்லை. ‘கிளர்வில்’ எனும் ஊடில் தன்னிருப்பை ஸ்திரப்படுத்திக் கொள்ள சில காரியங்களை செய்து முடிக்கிறார். டயபாலிக் ‘டேஞ்சர்’ ஆனவர் எனப் பெயர் பெறும் படலம் இது.
டிசம்பர் 2013இல் வந்த ‘Operation சூறாவளி’ என்ற இதழின் பின்னட்டை படம் டயபாலிக்கின் பராக்கிரமத்தை பறைசாற்றும்படி உள்ளது. டயபாலிக்கைப் பிடிப்பதை தன் லட்சியமாகக் கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர் ஜிங்கோவுடனேயே இணைந்து, ’க்ரே குரோஸ்’ எனும் போட்டி இயக்கத்தை பூண்டோடு அழிக்கிறார்.
இரண்டு கதைகளிலும் ஓர் ஓற்றுமை நிலவுகிறது எனில் அது “காதல்”. குற்றத் திருவிழாவில் டயபாலிக் மீது, நடாஷா கொண்டுள்ள காதல். இரண்டாவதில் இன்ஸ்பெக்டர் ஜிங்கோ ஆல்டீ கொண்டுள்ள காதல். நடாஷா நம்மூர் சொர்ணக்கா போன்றவர். உருவத்தில் அல்ல குணத்தில். டயபாலிக்கின் உதவியோடு அவளுக்கு எதிராக இருக்கும் ஆதாரங்களை எல்லாம் அழித்துவிட்டு அமைதியான வாழ்க்கை மேற்கொள்கிறாள். டயபாலிக் பற்றிய அறிந்து கொள்ள அவளைக் கடத்தி விமானத்தில் கொண்டுபோகின்றனர். இறப்பது உறுதி என்றானவுடன் அவள் சமயோசிதமாக செய்யும் காரியத்தால் ‘டயபாலிக்’கிற்கு இறவாப் புகழ் கிடைக்கிறது.
டயபாலிக்கும் நடாஷாவும் குற்றப் பிண்ணனியுள்ள ஒரே ரகத்தினர். ஆனால் இன்ஸ்பெக்டர் ஜிங்கோ மீது கண்டதும் காதலில் லயிக்கும் ஆல்டீ ஒரு சீமாட்டி. தமிழ்ப்பட நாயகிகள் போல், இறக்கும் தருவாயிலுள்ள ஆல்டீ ஜிங்கோவை மணந்து கொள்ள விரும்புகிறார். ஆல்டீ மீதுள்ள காதலால், தனது பரம எதிரி எனும் கருதும் டயபாலிக்குடனே ஜோடி சேர்கிறார் ஜிங்கோ. கதாபாத்திரங்களை காதல் செலுத்துகிறது.
கத்தியை வீசுவதில் கில்லாடியான டயபாலிக்கிற்கு, ஜாகுவார் கார் என்றால் கொள்ளை பிரியம். ரசனைக்காரரான டயபாலிக்கை உங்களுக்கும் பிடிக்கும்.
– ஆர் டின்