இது தமிழ் ⚡ AMP

துவங்கியது ‘பாம்பு சட்டை’

By Dinesh R | Feb 11, 2015

பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘பாம்பு சட்டை’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று துவங்கியது. R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் மற்றும் இயக்குனர் தயாரிப்பாளர் மனோபாலா அவர்களின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் இணைந்து தயாரிக்கும் ‘பாம்பு சட்டை’. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நடிப்பில் தனக்கென ஒரு தனி பாணியைக் கையாண்டு வரும் பாபி சிம்ஹா இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பல தமிழ்ப் படங்களில் நடித்து வரும் வளர்ந்து வரும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகி கீர்த்தி சுரேஷ் ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்த முன்னாள் கதாநாயகி மேனகா அவர்களின் மகள். ‘பாம்பு சட்டை’ படத்தை புதுமுக இயக்குநர் ஆடம் தாசன் இயக்குகிறார். இவர் இயக்குநர் சங்கரின் இணை இயக்குநர் ஆவார். K.G. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியின் வெற்றியாளரான அஜீஷ் அசோக் இசையமைப்பளாராக அறிமுகமாகிறார். கவிப்பேரரசு வைரமுத்து, யுகபாரதி, விவேகா, கார்க்கி ஆகியோரது வரிகளில் பாடல்கள் உருவாகிறது. பாண்டியராஜ் கலையமைப்பில் பிருந்தா நடனமமைக்கிறார். பில்லா ஜகன் சண்டை பயிற்சி அமைக்கிறார்.

படத்தைப் பற்றி தயாரிப்பாளர் மனோபாலா கூறும்பொழுது, ‘எனது முதல் தயாரிப்பான “சதுரங்க வேட்டை” திரைப்படத்திற்கு மக்கள் தந்த வெற்றியை மதிக்கின்றேன். ரசிகர்களை கவரும் வண்ணம் அடுத்த தயாரிப்பும் இருக்க வேண்டும். நல்ல படங்களைத் தயாரிப்பது ஒரு பழக்கமாக மாற வேண்டும் என்று எண்ணினேன். ஆடம் தாசன் இந்தக் கதையை கூறிய உடனே இப்படத்தைத் தயாரிப்பது என முடிவு செய்தேன். இன்று முதல் இப்படத்தின் படப்பதிவு தொடங்கவுள்ளது.

தன் திறமைக்கு ஈடு கொடுக்கும் கதாப்பாத்திரங்கள் மற்றும் கதைகளைத் தேர்ந்தெடுத்து, தனது வித்தியாசமான நடிப்பால் மக்களைக் கவர்ந்துள்ள பாபி சிம்ஹா இப்படத்திற்குப் பெரும்பலம். ‘பாம்பு சட்டை’ திரைப்படம் சிம்ஹாவின் ஆற்றல் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் அபிமானத்தின் உண்மையான அடையாளத்தையும் வெளிப்படுத்தும். கீர்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. மேலும் ‘தாமிரபரணி’ புகழ் பானு இப்படத்தில் நடிக்கிறார். கதையில் முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரம் என்பதால் பானுவின் நடிப்பு பெரிதும் பேசப்படும். வெவ்வேறு திறமைகளின் ஒருசேர கூட்டணியான இந்தப் பாம்பு சட்டை பலரது நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இந்த கூட்டணி ரசிகர்களுக்கு நல்ல படத்தைக் கொடுக்கும்” என்கிறார் தயாரிப்பாளர் மனோபாலா.