தெய்வத்திருமகள் – பாரதி கண்ட புதுமை இயக்குனராக ஏ.எல்.விஜய் உருவாகி உள்ளார். பிற மொழிகளில் உள்ள நல்லப் படைப்புகளை தமிழில் கொணர்ந்து வருகிறார். அதற்காக வருடக் கணக்கில் மெனக்கெடுகிறார் என்பது அவரது பேட்டியில் இருந்து தெரிய வருகிறது. “ஐ ஆம் சாம்” என்ற ஆங்கிலப் படத்தின் தழுவி, ஆறு வயது தந்தைக்கும் ஐந்து வயது மகளுக்கும் இடையேயான நேசத்தைச் சித்திரிக்கும் அற்புதமான படத்தினைத் தந்துள்ளார் இயக்குனர்.
ஆறு வயதிலேயே மனவளர்ச்சி நின்று விடும் கிருஷ்ணாவை சமூக சேவகி ஒருவர் மணக்கிறார். கிருஷ்ணாவின் மனைவி இறந்து விட, தன் மகள் நிலாவை தனக்கு தெரிந்தவரை வளர்த்து வருகிறார் கிருஷ்ணா. நிலாவின் தாய் வழி தாத்தா, நிலாவை கிருஷ்ணாவிடம் இருந்து பிரித்து விடுகிறார். நிலாவை மீட்க அனுராதா ரகுநாதன் என்னும் வக்கீலின் உதவியுடன் நீதி மன்றத்தின் உதவியை நாடுகிறார் கிருஷ்ணா. நிலா தன் தந்தையுடன் இணைந்தாளா என்ற கேள்விக்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.
திரையரங்கம் விட்டு கனத்த நெஞ்சுடன் பார்வையாளர்கள் வர காரணமாக இருப்பவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். நிரவ்ஷாவின் ஒளிப்பதிவில் அவலாஞ்சி கிராமமும், கலை இயக்குனரின் கைவண்ணத்தில் ‘சாக்டேட் ஃபாக்டரி’யும் அருமையாக திரையில் தோன்றுகிறது.
இயக்குனர் ஏ.எல்.விஜய். மதராசபட்டினத்தில் பல ஆங்கிலப் படங்களை நினைவுப் படுத்தியவர் தெய்வத்திருமகளில் ஒரே ஒரு படத்தை நினைவுப்படுத்துவது ஆறுதலான சங்கதி. தர்க்கத்திற்கு அப்பாற்பட்டதாக நீதிமன்றக் காட்சிகள் அரங்கேறுகின்றன. பொருளாதார அழுத்தத்தினால் உருவாகும் தியாக சீலனாக ஆறு வயது மனவளர்ச்சிப் பெற்றவரைச் சித்தரித்திருப்பது வேதனைக்குரிய முடிவாகும்.
தெய்வத்திருமகள் – கிருஷ்ணாவின் மனைவி/நிலாவின் அம்மா.
பி.கு.: மாசடையாத ஐந்து அல்லது ஆறு வயதுக் குழந்தை நேசத்துடன் இருப்பது இயற்கையே. திருமகளாய் பிறந்து, சமூக சேவகியாய் பரிணாமித்து.. மன வளர்ச்சி நின்ற கிருஷ்ணாவை மணந்தது செயற்கரிய செயல்.