இது தமிழ் ⚡ AMP

மக்கள் இவ்ளோ நல்லவங்களா இருக்காங்களே! – 4 போலிஸ்

By Dinesh R | Nov 12, 2014

தமிழ்த் திரை உலகில் தற்போது உலா வரும் புதிய சிந்தனை உடைய நவீன கதைகளுக்கு முன்னோடியாக இருக்கும் ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனமும், லியோ விஷன் நிறுவனமும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா…, தற்போது தயாரிப்பில் இருக்கும் ‘அண்டாவ காணோம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து அடுத்து தயாரித்து வெளியிட இருக்கும் படம் ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சிந்தனையைத் தூண்டும், குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைச் சித்திரமான இந்தப் படத்தின் தலைப்பே கதை சொல்லும். ‘நல்ல பொருத்தமான தலைப்பே படத்தின் வெற்றியை 50 சதவீதம் தீர்மானிக்கும்’ என்கிறார் லியோ விஷன் ராஜ்குமார். அவரது முந்தைய படங்களும் இதைப் போலவே நீண்ட தலைப்பு உடைய படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் இதுவரை கேட்டிராத, பார்த்திராத ஒரு புதிய கதையாகும். புதிய இயக்குநர் ஸ்ரீ கிருஷ்ணா இந்தக் கதையைச் சொல்லும் போதே இதைத் தயாரிக்க வேண்டும் என்று உடனடியாக முடிவு செய்து விட்டேன். மாதிரி கிராமமாக திகழும் ஒரு கிராமமும், அந்த ஒழுக்கம் தங்களுக்கு அசௌகரியம் தருகிறது எனக் கருதும் நாலு போலிசையும் பற்றிய கதை தான் ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’.

இந்தக் கதை ஓட்டத்தைக் குலுங்க வைக்கும் நகைச்சுவை மூலம் எல்லாத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் படமாக்கி இருக்கிறோம். அருள் நிதி நாயகனாக நடிக்க அவருக்கு இணையாக நடித்து இருப்பவர் ரம்யா நம்பீசன். சிங்கம் புலி, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ புகழ் பகவதி பெருமாள் தங்களது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை நிச்சயம் கவர்வர். என்னுடைய பட நிறுவனமான ஜே.எஸ்.கே. ஃபிலிம் கார்ப்ரேஷன் மற்றும் லியோ விஷன்ஸ் சார்பாக மேலும் திறமைகளை அறிமுகம் செய்ய உள்ளோம்’ என உவகையோடு கூறினார் ஜே சதீஷ் குமார்.