தனுஷின் 13 வருட காத்திருப்புஒருவழியாகத் திரையேறி விட்டது.
விளம்பரம்
சூழலால் நீரோடி கிராமத்தில் இருந்து சூடான் நாட்டிற்கு வேலைக்கு செல்லும் மரியான், அந்நாட்டில் ஏற்படும் பிரச்சனையில் இருந்து தப்பினானா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.
நாயகனையே சுற்றிச் சுற்றி வரும் வழக்கமான நாயகி என பார்வதியை சுலபமாகப் புறந்தள்ளி விட முடியாது. பனிமலராகவே திரையில் வலம் வருகிறார். முகபாவனைகளாலேயே கலக்குகிறார். ‘கல்யாணமாகிப் போனவுடன் சீலியம்மாவின் ஆப்பக்கடையை இழுத்து மூட வைப்பேன்’ என்ற பார்வதியின் புளித்துப் போன வசனத்தை மட்டும் மன்னித்து விடலாம். பாக்யராஜின் நாயகி பவுனு போல நாயகனின் வருகைக்காகக் காத்திருக்கிறார். தனுஷ்-பார்வதியின் நெருக்கமான காதல் காட்சிகள் முதல் ஊடல் காட்சிகள் வரை என சகலமும் மார்க் கோனிக்சின் ஒளிப்பதிவில் வெகு அற்புதமாக உள்ளது. பெல்ஜியம்காரரான அவர் கதையை உள்வாங்கி அழகான விஷுவலாக வெளிக்கொணர்ந்துள்ளார்.
படம் முழுவதும் தனுஷ் வியாபித்து இருந்தாலும், கண்டிப்பாக இது இயக்குநரின் படமே. முதல் பாதியில் காதலும், இரண்டாம் பாதியில் போராட்டமும் எனப் படம் இரண்டு வெவ்வேறு பாதையில் செல்கிறது. நீர்ப்பறவை போல் படம் நேரடியாக எதுவும் சொல்ல துணியவுமில்லை; எதையும் வலிந்து திணிக்கவுமில்லை. ஆனால் இப்படத்தின் இரண்டாம் பாதியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக சிங்கள இராணுவத்தின் அட்டூழியத்தை கதையோடு இயைந்து சிறு காட்சியாக வைத்துள்ளனர். சுட்டது யாரென்பதை வசனங்களில் கூட மிகக் கவனமாகத் தவிர்த்துள்ளனர். இது மரியானின் கதையை சொல்லும் படம். ஆக நீர்ப்பறவையை விட நேர்மையான படைப்பே!
சூடான் நாட்டு தீவிரவாதிகள், ஆளரவமே இல்லாத பாலைவனத்திலும் வானத்தை நோக்கி சடங்கு போல் சுட்டுக் கொண்டே உள்ளனர். தீவிரவாதிகள் மனம் திருந்த எப்படி என்னப் பேசணுமோ.. அப்படிப் பேசி கனிய வைத்து விடுவதில் விஜயகாந்த் கில்லாடி. ஆனால் பாவம் தனுஷ். “நாங்களும் ஏழைங்க தான். நோ மணி” என அவர் முகபாவனைகளோடு சொல்லியும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. காட்சிகள் கொஞ்சம் மெதுவாக நகருவதால் படத்தின் நீளத்தை அநாவசியமாக சந்தேகப்பட வேண்டியுள்ளது.
தீக்குறிசியாக வரும் விநாயகன் (திமிரு படத்தில் காலை நொண்டியவாறு வருபவர்) திடீரென நாயகியை பலாத்காரம் செய்ய முயல்கிறார். பாலைவனத்தில் 300 கி.மீ. நடந்த களைப்பாலும் பசியாலும் நாயகனுக்கு மனப் பிரமை ஏற்படுகிறது. மறுபடியுமா என பீதி எட்டிப் பார்க்கும் பொழுது, நல்லவேளையாக படம் எந்த மனவுளைச்சலையும் தராமல் சுபமாக முடிகிறது.