மெளனகரு – ஒரே பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் தமிழ்ப் படங்கள் மத்தியில் வந்துள்ள நல்லதொரு மாற்றுப் படம்.
பணத்திற்கு ஆசைப்பட்டு ஒரு கொலை செய்கிறார் காவல் துறை உதவி ஆணையர். அவருக்கு மூன்று காவல்துறை அதிகாரிகள் உதவி செய்கின்றனர். பின் அந்தத் தவறை மறைக்க அவர்கள் மேலும் தவறுகள் செய்ய வேண்டி வருகிறது. இவர்களிடம் கருணாகரன் என்னும் கல்லூரி மாணவன் சந்தர்ப்ப வசத்தால் சிக்கிக் கொண்டு அல்லாடுகிறான். கருணாகரனின் எதிர்காலம் என்ன ஆனது என்பதற்கும், தவறிழைக்கும் காவல்துறையினர்கள் நிலைமை என்ன ஆனது என்பதற்கும் பதிலுடன் படம் நிறைவுறுகிறது.
கருணாகரனாக அருள்நிதி. நாயகத்தனம் இல்லாத ஒரு படத்தில் சரியாகப் பொருந்துகிறார். பெரும்பாலும் மெளனமாக, நிலைமை கை மீறும் பொழுது செயல்படத் தொடங்குகிறார். முகத்திற்கு நேராகத் துப்பாக்கி பிடிக்கப் படும்பொழுதும், மனநிலை மருத்துவமனையில் சிக்கித் தவிக்கும் பொழுதும், அனைவரும் இவரை நம்ப மறுக்கும் பொழுது அருள்நிதி பரிதாபப்பட வைக்கிறார். படத்தின் இறுதிக் காட்சிகளின் நீளம் அதிகமாக உள்ளது. எதார்த்தமாகச் செல்லும் படத்தின் முடிவிலும் தர்மத்தைக் காப்பாற்றி விடுகிறார் இயக்குநர் சாந்தகுமார். எனினும் சராசரி தமிழ்ப் படத்தைத் தராததற்குப் பாராட்டப்பட வேண்டியவர். கதாப்பாத்திரத் தேர்வைச் செதுக்கியுள்ளார் என்றே சொல்ல வேண்டும். வெறும் பார்வைகளாலேயே நாயகனின் அண்ணி் குணத்தைச் சித்தரித்து இருப்பது; ‘கைலி கட்டிக் கொண்டும்; கருப்பாகவும் இருந்தால் விசாரிக்காமலேயே அடிப்பீங்களா!?’ என்று கோபப்படும் கல்லூரி விடுதிப் பொறுப்பாளர் ஜார்ஜ் மரியான்; பொறாமையும், வஞ்சக எண்ணமும் கொண்ட நாயகனின் சக வகுப்பு மாணவன்; குற்றவுணர்வுடன் கல்லூரி முதல்வர்; நிராகரிக்கப்படும் வலியுடன் கல்லூரி முதல்வரின் மகன்; உதவி ஆணையர் மீது எரிச்சலுறும் காவல்துறை அதிகாரி; காவல்துறையினருக்குப் பிரதியுதவி செய்ய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் மனநல மருத்துவமனை மருத்துவர் என இயக்குநர் பார்த்துப் பார்த்து ஆட்களையும் அவர்களின் குண நலன்களையும் சித்தரித்துள்ளார். போகிறப் போக்கில் சர்வ சாதாரணமாய்க் கொலைகள் நடப்பதாகக் காட்டி வரும் தமிழ்த் திரைப்படங்கள் மத்தியில், ஒரு கொலையைச் செய்து விட்டு உதவி ஆணையர் படும் அவஸ்தைகளை அழகாகக் காட்டியுள்ளனர். அதிகாரம் தவறாக உபயோகப்படுத்தும் பொழுது சராசரி ஆட்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் படத்தில் காட்டி உள்ளனர். பேசிப் பேசிப் பிரச்சனைகளைப் பெரிதுபடுத்தாமல் மெளனமாக இருப்பது சிறந்தது எனினும் மெளனமாகவே எப்பொழுதும் இருந்து விட முடியாது. மேலும் மெளனங்களைச் சரியாக புரிந்து கொள்ள எத்தனை பேரால் முடியும் என்பதும் ஐயமே!!