மதுரை சம்பவம் எடுத்த இயக்குநரின் மூன்றாவது படம் தொப்பி. படத்தில் நாயகனாக முரளிராம் அறிமுகமாகிறார்; நாயகியாக மலையாள வரவான ரக்ஷா நடிக்கிறார்.
நியூசிலாந்தில் 25 வருடங்களாக ஹோட்டல் நடத்தி வரும் நாமக்கலைச் சேர்ந்த பரமராஜ் இப்படத்தைத் தயாரித்துள்ளார். அவர் பாக்கியராஜ் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர். தனது சினிமா எடுக்கும் கனவை நனவாக்கியதோடு, தனது அபிமான நடிகரும் இயக்குநருமான பாக்கியராஜையே தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு தலைமை தாங்க வைத்திருந்தார். அதே போல், படத்தின் இசையமைப்பாளரான ராம்பிரசாத் சுந்தரு, வெளிநாட்டில் வாழ்பவரே! அமெரிக்க வாழ்த் தமிழரின் இசையில், பாடல்கள் நேட்டிவிட்டி (Nativity) இசையுடன் ஒலிக்கிறது என்பதை விட, வைரமுத்துவின் பாடல் வரிகளைக் கேட்க முடிகிறது என்பது கூடுதல் விசேஷம்.
தொப்பி எனும் தலைப்பு காவல்காரர் அணியும் தொப்பியையும், அது தொடர்பான அதிகாரத்தையும் குறிக்கிறது. மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த நாயகனுக்கு காவல்துறையில் சேர வேண்டுமென ஆசை. கதை அது தொடர்பாகவே நகர்கிறதென யூகிக்க முடிகிறது.