இது தமிழ் ⚡ AMP

“ஆழி: மீன்பிடி படகிற்குள் நடக்கும் உணர்வுப்பூர்வமான விஷயங்கள்” – சரத்குமார்

By Dinesh R | Feb 11, 2026

மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆழி’ திரைப்படத்தில் சரத்குமார், இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஸ்ரீ ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்திருக்கிறார். ஆஸ்கார் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இப்படத்தின் ஒலி வடிவமைப்பினை மேற்கொண்டிருக்கிறார். க்ரைம் த்ரில்லராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை 888 புரொடக்ஷன்ஸ் மற்றும் செல்லுலாய்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். இத்திரைப்படத்தைத் தமிழகம் முழுவதும் உத்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்குகிறது. பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இவ்விழாவில் பேசிய இயக்குநர் மாதவ் ரமா தாசன், “நான் தமிழில் இயக்கியிருக்கும் முதல் படம் இது. இதற்கு முன் மலையாளத்தில் ‘மேல் விலாசம்’, ‘அப்போதகேரி’, ‘இளையராஜா’ என மூன்று திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன். இதில் ‘இளையராஜா’ படத்தைத் தமிழில் உருவாக்க எண்ணினேன். தமிழில் படத்தை இயக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம். அதற்கான நேரம் இப்போது அமைந்து ஆழி உருவாகியுள்ளது. 70 சதவீதம் கடலில் நடைபெறும் இந்தக் கதைக்கு சவுண்ட் அவசியம். இதற்காகச் சர்வதேச அளவில் அனுபவம் உள்ள ரசூல் பூக்குட்டியிடம் கேட்டோம். அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு தற்போது வரை படத்தின் தரமான ஒலி அமைப்பிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்தில் நாய் ஒன்றும் நடித்திருக்கிறது. அதனுடைய ஒலிக்காகக் கஷ்டப்பட்டு உழைத்தார். நாயின் குரைப்பு ஒலியை துல்லியமாகப் பதிவு செய்யும்போது அவருடைய மைக் ஒன்றும் சேதமடைந்தது. அந்த அளவிற்கு நேர்த்தியாக உழைத்திருக்கிறார். இந்தப் படத்தில் நாயின் கதாபாத்திரமும், அதனுடைய ஒலி அமைப்பும் ரசிகர்களைக் கவரும். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு அனைவருக்கும் கடலுக்குள் நிஜமாகவே சென்று வந்த ஒரு உணர்வு ஏற்படும்.

இந்தக் கதையை முதலில் சரத்குமாரிடம் சொன்னேன். அவர்தான் அவருடைய கதாபாத்திரத்தில் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டார். அவருடைய கேரக்டரில் நிறைய வேரியேஷன்ஸ் இருக்கிறது. படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கும் தருணத்தில் அதிகாலை 3 மணி அளவில் கூட என்னைத் தொடர்பு கொண்டு அவரது கதாபாத்திரம் குறித்த கேள்விகளைக் கேட்பார். அதற்கு நான் விளக்கம் அளிப்பேன். இந்த அளவிற்கு அந்தக் கதாபாத்திரத்தின் மீது ஈடுபாடு காட்டி நடித்திருக்கிறார் சரத்குமார்.‌ இப்படத்தில் அவர் நெகட்டிவ் ஷேடிலும் நடித்திருக்கிறார்” என்றார்.

நடிகர் சரத்குமார், ”இந்தப் படத்தின் இயக்குநர் மாதவ் ரமா தாசன் கதை சொல்ல வந்தார். அவர் வருவதற்கு முன் அவர் இயக்கத்தில் வெளியான ‘மேல் விலாசம்’ படத்தை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அவர் கதை முழுவதும் சொன்னார். அது வித்தியாசமான கதை. பெரும்பாலும் மீன்பிடி படகு ஒன்றில் நடைபெறும் கதை. பெரும்பாலும் கடல் தான் திரைக்கதையில் இருக்கிறது. இதை எப்படி நீங்கள் திரையில் காட்சிப்படுத்துவீர்கள் என கேட்டேன். அது குறித்து நாங்கள் முழுமையாகத் திட்டமிட்டிருக்கிறோம் என சொன்னவுடன் அதிலேயே அவருடைய அர்ப்பணிப்பு எனக்குத் தெரிந்தது. ஒரு மீன்பிடி கப்பல் அளவிற்கான கப்பல் ஒன்றை அரங்கத்திற்குள் உருவாக்கி, அதனை இயக்குவதற்காக ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தினார். அதனால் இந்தப் படத்தை நான் ஒரு வித்தியாசமான படமாகத்தான் பார்க்கிறேன்.

பல படங்கள் ஆடல், பாடல், பிரம்மாண்டம் என கமர்ஷியல் அம்சங்களுடன் இருக்கும். ஆனால் இதில் ஆடல் பாடல் போன்ற பிரம்மாண்டங்கள் இல்லை. ஆனால் கதை பிரம்மாண்டமானதாக இருக்கும்.

இன்றுள்ள ரசிகர்கள் பலவிதமான படங்களைப் பார்த்து ரசிக்கிறார்கள். செல்ஃபோனில் வெளியாகும் ஷார்ட்ஸ், ரீல்ஸ் இதிலெல்லாம் நடிக்கிறார்கள். இதனால் நடிகர்களுக்கு ரீல்ஸில் நடிப்பதா, ஷார்ட்ஸில் நடிப்பதா, வெப்சீரிஸில் நடிப்பதா, டெலிவிஷனில் நடிப்பதா, பெரிய ஸ்கிரீனில் நடிப்பதா என்ற குழப்பம் இருக்கிறது. ஆனால் இந்த வகையான குழப்பம் எந்த நடிகர்களுக்கும் தேவையில்லை. ஏனெனில் எதில் நடித்தாலும் நடிப்பு நடிப்புதான். அதனால் எதில் வேண்டுமானாலும் நடிக்கலாம். எந்தக் குழப்பமும் தேவையில்லை. காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப நாம் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் மாற்றம் ஒன்றே மாறாதது.

மீன்பிடி படகிற்குள் இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் உணர்வுபூர்வமான விஷயங்கள் தான் இப்படத்தின் சிறப்பு. இந்தப் படத்திற்கு என்னுடைய நண்பர் ரசூல் பூக்குட்டியின் பங்களிப்பு வலிமையானது என்றே சொல்லலாம். இது சவுண்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம். அவருடைய அர்ப்பணிப்பு உணர்விற்காக அவருக்கு மேலும் பல ஆஸ்கார் விருதுகள் கிடைக்க வேண்டும் என்ற வாழ்த்துகிறேன். இந்தப் படத்தில் பெல்ஜியம் மலினாய்ஸ் வகையைச் சேர்ந்த நாய் ஒன்று நடித்திருக்கிறது. நாயின் குரலைத் துல்லியமாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இரண்டு நாள் அவரது குழுவினருடன் ரசூல் பணியாற்றினார். இந்தப் படத்தில் நாயுடனும் ஒரு சண்டைக் காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் சிறப்பானதாக இருக்கும்” என்றார்.