இது தமிழ் ⚡ AMP

அகோரி திரைப்படம் – தீய சக்திக்கும், அகோரிக்கும் இடையேயான சண்டை

By Dinesh R | Dec 09, 2023

தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் இல்லம் தேடி மக்கள் மனதில் அமர்ந்திருக்கும் ஒரு நடிகராக வளர்ந்திருப்பவர் சித்து. இவர் நடித்த ‘திருமணம்’, ‘ராஜா ராணி’ போன்ற தொடர்கள் மிகவும் புகழ் பெற்றவை. இவர் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘அகோரி’ ஆகும். இதுவரை சின்னத்திரை மூலம் தனது திறமையை வெளிப்படுத்திய இவர், பெரிய திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளதால், தான் அறிமுகம் ஆகியுள்ள இந்தப் படத்தைப் பெரிதும் நம்பியிருக்கிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

‘பாரதி’ படத்தின் மூலம் பாரதியாகவே மக்கள் மனதில் அழுத்தமாக இடம் பிடித்த சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பிலும் ‘அகோரி’ என்கிற படம் உருவாகியிருக்கிறது. மோஷன் ஃபிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனன் தயாரித்திருக்கிறார். படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குநர் D.S. ராஜ்குமார். சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே கதை. இது ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படம். ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினருக்குமான வணிக அம்சங்கள் படத்தில் இருக்கும் படி உருவாகியிருக்கிறது.

இப்படத்தில் ஹரித்துவார் செட் அமைத்து அகோரிகளுடன் சாயாஜி ஷிண்டே நடித்த காட்சி, மற்றும் கேரளாவின் காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு அகோரிகள் நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டன.

படத்தில் இடம்பெறும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் காட்சிகள் கண்களை மிரளவைக்கும்படி இருக்கும். தெலுங்கில் ‘சஹா ‘படத்தின் மூலம் புகழ் பெற்ற ஜக்குல்லா பாபு தமிழில் வில்லனாக இப்படத்தில் வருகிறார். இவரது உயரம் 6.5 அடி ஆகும். நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடித்திருக்கிறார். இவர் கர்நாடக மாநில அரசின் விருது பெற்றவர். இவர் ‘144’ பட நாயகியும் கூட.

இவர்களுடன் மைம் கோபி, டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி,கார்த்தி, ‘கலக்கப்போவது யாரு’ சரத், டிசைனர் பவன் ஆகியோரும் நடித்துள்ளனர். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற புதிய கலைஞர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

அகோரி படத்துக்கு, வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் ஈகோ, கள்ளத்துப்பாக்கி படங்களின் ஒளிப்பதிவாளர். இசை ஃபோர் மியூசிக். இவர்கள் அண்மையில் கேரளாவில் புகழ் பெற்று வருகிறார்கள். நான்கு இசையமைப்பாளர்களின் கூட்டணி இது. கிராஃபிக்ஸ் காட்சிகள் மிரட்டலாக வந்திருப்பதாகப் படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார், ராட்சசன் படத்தின் CG டீமின் அக்ஷயா ஸ்டுடியோஸ் அசோக் குமார் இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர். கலை இயக்குநராக ஜெயச்சந்திரன் நடித்துள்ளார்.

‘அகோரி’ படம் பார்த்த சென்சார் அதிகாரிகள் நல்ல பொழுதுபோக்குடன் அமைந்த திகில் கதையாக இருக்கிறது என்று பாராட்டி உள்ளனர். குழந்தைகள் பெரியவர்களுடன் பார்க்கும்படியாக இருப்பதால் யூ/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

இப்படத்தைத் திரையரங்குகளில் PVR சினிமாஸ் வெளியிடுகிறது. பிரம்மாண்டமான பல வெற்றிப் படங்களை வெளியிட்ட பிவிஆர் சினிமாஸ் இப்படத்தை வெளியிடுவதில் இருந்து படத்தின் நம்பகத்தன்மையும் வணிக மதிப்பும் அதிகரித்துள்ளன.